India
3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஏற்றுமதி, இறக்குமதி சரிவு : இந்திய வர்த்தகம் குலையும் அபாயம்
நாட்டில் நிலவும் பொருளாதார மந்த நிலையால் மோட்டார் வாகனத்துறை உள்ளிட்ட பல துறைகள் ஆட்டம் கண்டுள்ளன. இதனால் ஏராளமான தொழிற்சாலைகள் உற்பத்தியை நிறுத்தியுள்ள நிலையில், லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையை இழந்து தவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், இந்தியாவின் ஏற்றுமதி - இறக்குமதி கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத சரிவைச் சந்தித்து இருப்பதாக வர்த்தக அமைச்சக புள்ளி விவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது. இந்தியாவில் இருந்து அயல்நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் 30 முக்கியமான பொருட்களில், 8 பொருட்கள் தவிர மற்ற அனைத்தின் ஏற்றுமதியும் கடுமையாக சரிந்துள்ளது.
செப்டம்பர் மாத ஏற்றுமதி, இறக்குமதியை கணக்கில் எடுத்தால், அது கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிவைக் கண்டுள்ளது தெரியவந்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதத்தில் இந்தியாவின் ஏற்றுமதி 6.57 சதவிகிதம் குறைந்தது, 2,600 கோடி டாலராக உள்ளது. இறக்குமதி 13.9 சதவிகிதம் வீழ்ந்து 3,690 கோடி டாலராக உள்ளது.
ஏற்றுமதியைப் பொறுத்தவரை, நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள், ரசாயனங்கள், இன்ஜினியரிங் பொருட்கள், ரெடிமேட் ஆடைகள், பெட்ரோலியப் பொருட்கள் சரிவைக் கண்டுள்ளன.
இறக்குமதியை எடுத்துக்கொண்டால், நிலக்கரி, பெட்ரோலியம், ரசாயனம், பிளாஸ்டிக் பொருட்கள், ராசிக்கற்கள், இரும்பு மற்றும் ஸ்டீல், எலக்ட்ரானிக் பொருட்கள் என சரிவைச் சந்தித்துள்ளன.
தங்கம் இறக்குமதி 50% சரிவு :
இதேபோல், மிகப்பெரிய அளவில் தங்கம் இறக்குமதி செய்யும் நாடாக நீண்டகாலமாக இந்தியா உள்ளது. பட்ஜெட்டில் அதன் மீதான வரி உயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது தங்கம் இறக்குமதியும் குறைந்துள்ளது. செப்டம்பரில் மட்டும் தங்கம் இறக்குமதி 50.82 சதவிகிதம் குறைந்திருக்கிறது.
இவ்வாறு இந்தியாவின் ஏற்றுமதி - இறக்குமதி சரிவைச் சந்தித்து வரும் நிலையில் ஏற்றுமதி துறையில் பணிபுரியும் ஒருவர் கூறுகையில்,“தாமதம் ஆக ஆக ஏற்றுமதியின் சரிவு கட்டுப்பாட்டை மீறிச்செல்லும் அபாயம் உள்ளது.
மேலும், இவ்வாறு ஏற்றுமதி குறைவது ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியை கடுமையாகப் பாதிக்கும். எனவே இப்பிரச்சனையில் மத்திய அரசு உடனடியாக தலையிட்டு, வெளிநாட்டு வர்த்தகக் கொள்கையைச் சீரமைக்க வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
Also Read
-
மும்முரமாக நடைபெறும் தேனாம்பேட்டை – சைதாப்பேட்டை மேம்பாலப் பணி! : அமைச்சர் எ.வ.வேலு நேரில் ஆய்வு!
-
“முதலமைச்சர் கோப்பை 2025-ல் 16 லட்சம் இளைஞர்கள் பங்கேற்பு!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
“நாட்டிற்கு பெருமை சேருங்கள்! களம் நமதே! வெற்றி நமதே!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!
-
”குடும்பச் சண்டையில் உள்ள வன்மத்தை இளைஞர்கள் மீது கொட்டாதீர் : அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பதிலடி!
-
முதலமைச்சர் கோப்பை – 2025 நிறைவு! : கோப்பைகள் மற்றும் பரிசுகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!