India
“கம்யூனிசம் நீடிக்கும்; நிலைத்த வெற்றிகளைக் குவிக்கும்” - திராவிடர் கழகம் வாழ்த்து!
நூற்றாண்டு காணும் கம்யூனிஸ்ட் கட்சியின் தொடக்க விழாவிற்கு வாழ்த்துத் தெரிவித்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதன் விவரம் வருமாறு :
“இன்று (17.10.2019) கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழா தொடங்குகிறது என்பது அறிய மகிழ்கிறோம்!
1920ம் ஆண்டு அக்டோபர் 17 அன்று தாஷ்கண்ட் நகரில் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் கிளை அமைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்தியாவில் பல பகுதிகளில் கம்யூனிஸ்ட் கிளைகள் உருவாக்கப்பட்டு, மக்கள் போராட்டக் களங்கள் முளைத்தன.
இந்தப் பின்னணியில் தமிழ்நாட்டில் முதல் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை 1936ம் ஆண்டு சென்னையில் தொடங்கப்பட்டது என்பது வரலாற்றுச் சுவடு ஆகும்.
1926ல் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கிய தந்தை பெரியார், சோவியத் ரஷ்யாவைக் காணச் செல்லும் முன்பே அவரது ‘குடிஅரசு’ வார ஏட்டில், பிரெடரிக் ஏங்கல்ஸ், காரல் மார்க்ஸ் ஆகியோரின் கம்யூனிஸ்ட் (Communist Manifesto) அறிக்கையைத் தமிழில் மொழி பெயர்த்து வெளியிட்டார் (11.10.1931, ‘குடிஅரசு’).
அதன்பிறகே அவர் சோவியத் யூனியனுக்குச் சென்றார். சோவியத் யூனியனுக்குச் சென்ற தலைவர்களிலேயே அதிக நாள் அங்கு தங்கிய தலைவர் என்ற தனிச்சிறப்பைப் பெற்றவர் தந்தை பெரியார்!
தோழர் மா.சிங்காரவேலர் அவர்களது நட்பு, லட்சியப் பணியில் தோழமையும் கொண்டு, ஒரு புது உலகைப் படைக்க முயலத் தொடங்கினார்.
எனவே, சுயமரியாதை இயக்கம் (திராவிடர் இயக்கம்), கம்யூனிஸ்ட் கட்சி இவை சகோதர தோழமை இயக்கங்களே ஆகும். அன்று தொடங்கிய கொள்கை உறவு - இடையில் சில உரசல்கள் வந்த போதிலும் - இன்றும் தொடர்கிறது; நாளையும், என்றும் தொடரும்.
திராவிடர் கழகத்தின் சார்பில் நமது வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் மிக்க மகிழ்ச்சியும், பெருமையும் அடைகிறோம். சோவியத் யூனியன் உடைபட்டதாலேயே கம்யூனிசம் தோற்றுவிட்டது என்பது சிலரின் பிதற்றல்.
காரிருளால் சூரியன்தான் மறைவதுண்டோ? கிரகணங்களால் நிலவுதான் நிரந்தரமாக மறைவதுண்டோ?
காய்ந்த வயிறு, பெருத்தத் தொந்தி, ஆதிக்க முதலாளித்துவம், இவற்றை எதிர்த்து, சமதர்ம இலக்குடன் ‘‘அனைவருக்கும் அனைத்தும்” கிட்டப் போராடும் தேவையும், உணர்வும் இருக்கும் வரை கம்யூனிசம் நீடிக்கும்; நிலைக்கும்; நிலைத்த வெற்றிகளையும் குவிக்கும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
Also Read
-
“11 பந்துகளில் அரைசதம்.. முதல் தர கிரிக்கெட்டில் அசத்திய சூர்யவன்ஷி.. அசந்துபோன இலங்கை வீரர்கள்!”
-
“கல்விக்கூடத்தை அரசியல் வியாபரக் களமாக மாற்றினால்.. வேடிக்கை பார்க்க மாட்டோம்”-திமுக ஐடி விங் எச்சரிக்கை!
-
காவிமயமாகும் கல்வி; உயிரை காவுகேட்கும் நீட்தேர்வு - திமுக மாணவரணி சார்பில் ஜூன் 23-ல் கண்டன ஆர்ப்பாட்டம்!
-
“பனையூர் பங்களா முன் கூடும் கூட்டம்.. இன்னுமாடா இந்த ஊர்ல நம்மள நம்புராங்க என்ற நிலை”: அப்பாவு விமர்சனம்!
-
அரசுப் பள்ளியில் ஆபாசப் பாடலுக்கு ஆட்டம் போட்ட அமைச்சர் விஸ்வநாதன் : காணொளி வெளியாகி சர்ச்சை!