India

SC, ST மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையை நிராகரித்தது ஏன்? - அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி!

தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டில் சேரும் தகுதியான ஆதி திராவிட மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையை மீண்டும் வழங்குவது குறித்து மறு பரிசீலனை செய்ய மத்திய - மாநில அரசுகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆதி திராவிட மற்றும் பழங்குடியின மாணவர்கள் உயர்கல்வி பெறும் வகையில் மத்திய அரசின் உதவியுடன் உயர்கல்விக்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

2012ம் ஆண்டு முதல் செயல்படுத்தி வந்த இந்த திட்டத்தில் மாற்றங்கள் செய்து, 2018- 19ம் கல்வியாண்டு முதல் அரசு ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கு மட்டுமே கல்வி உதவித்தொகை வழங்கவேண்டும் என்றும் நிர்வாக ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்கக்கூடாது என்றும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவின் அடிப்படையில், தமிழக அரசும், அனைத்து மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர்களுக்கு கடிதம் அனுப்பி உள்ளது.

இந்த இரு உத்தரவுகளையும் ரத்து செய்யக்கோரி நெல்லை மாவட்டம் தென்காசியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சுப்பையா உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்தனர்.

அந்த மனுவில், 2018 - 2019 கல்வியாண்டில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் சேர்ந்துள்ள நிலையில், அவர்களுக்கு கல்வி கட்டண உதவித்தொகையை நிராகரித்தது சட்டவிரோதமானது என்றும், ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்கல்வி கனவுகளை தகர்க்கும் வகையில் இந்த உத்தரவுகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் சேஷசாயி அடங்கிய அமர்வு, தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டில் சேரும் தகுதியான ஆதி திராவிட மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையை மீண்டும் வழங்குவது குறித்து மறு பரிசீலனை செய்து, 12 வாரங்களில் தகுந்த உத்தரவை பிறப்பிக்கும்படி மத்திய - மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டு, வழக்கை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தது.