India

“திணறிவரும் இந்திய பொருளாதாரத்திற்கு ஜி.எஸ்.டி-தான் முக்கியக் காரணம்” : பிரதமரின் ஆலோசகரே குற்றச்சாட்டு!

மத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜ.க அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையால் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் கடும் சரிவைச் சந்தித்து வருகின்றன. இதனால் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் எதிர்பார்த்த அளவை விட குறைவாக உள்ளது என ரிசர்வ் வங்கி தெரிவித்திருந்தது.

இந்நிலையில் ஜி.எஸ்.டி வரி வசூல் முறையை அமல்படுத்தி வணிகர்களை கடும் நெருக்கடியில் சிக்க வைத்தது. அதனால், ஜி.எஸ்.டி வரி வருவாய் கடந்த 19 மாதங்களில் இல்லாத அளவிற்கு, செப்டம்பரில் மட்டும் ரூ.91 ஆயிரத்து 916 கோடியாகக் குறைந்துள்ளது.

தொடர்ச்சியான பொருளாதார மந்த நிலை தற்போது கடும் வீழ்ச்சியாக மாறியுள்ளது. குறிப்பாக, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி, வங்கிகளில் வசூலாகாத வாராக்கடன். பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி போன்ற பல்வேறு காரணங்களினால் பொருளாதாரம் அதள பாதாளத்தில் விழுந்து கிடக்கிறது.

இந்நிலையில், இந்தியப் பொருளாதார வளர்ச்சி மந்தமாக இருப்பதற்கு ஜிஎஸ்டி-தான் முக்கியக் காரணம் என்று பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுத் தலைவர் பிபேக் தேப்ராய் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பான தனியார் டி.வி நிகழ்ச்சியின் நேர்காணல் ஒன்றில் பேசியிருக்கும் தேப்ராய், “ஜி.எஸ்.டி-யின் பாதிப்பு எவ்வளவு என்பதைத் துல்லியமாகக் கூற இயலாது; ஆனால், பொருளாதார வளர்ச்சி மந்தமானதற்கு ஜி.எஸ்.டியே மிக முக்கிய காரணம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “ஜிஎஸ்டி வரி வசூல் குறைந்து கொண்டே போகிறது என்றாலும், மேலும் வரியை குறைக்க வேண்டும்; அதற்கு இதுவே சரியான தருணம். நடப்பு நிதியாண்டுக்கான நிதிப் பற்றாக்குறை இலக்கு 3.3 சதவிகிதமாக நிர்ணயிக்கப்பட்டிருக்கும் நிலையில் அதை அடைவது மிகவும் கடினம்” என்றும், தனிநபர் வருமான வரியை அரசு கண்டிப்பாகக் குறைக்கும் எனவும் நம்பிக்கை உள்ளதாக பிபேக் தேப்ராய் தெரிவித்துள்ளார்.

முன்னதாக மோடி அரசின் தவறான கொள்கையால் விளைந்த பொருளாதார மந்த நிலையை சுட்டிக்காட்டும் அதிகாரிகள், உறுப்பினர்களை பதவியில் இருந்து நீக்கம் செய்யும் வேலையை மோடி அரசு தொடர்ச்சியாக செய்துவருகிறது.

குறிப்பாக, ஷமிகா ரவி மற்றும் ரத்தின் ராய் ஆகியோர் பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவில் இருந்து நீக்கப்பட்டர். இந்நிலையில் பொருளாதார மந்த நிலைக்கு ஜி.எஸ்.டி காரனம் என பேசிவரும் தின் ராய் நீக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.