India

வாடிக்கையாளர்களை அதிரவைத்த ஜியோவின் அறிவிப்பு... கால் கட்டணங்கள் எதற்காக? - ஜியோ விளக்கம்!

மிகக்குறுகிய காலத்தில் இந்திய தொலைத்தொடர்புத் துறையில் முன்னணி இடம் பிடித்த ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் புதிய அறிவிப்பால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

ஜியோ எண்ணிலிருந்து வேறொரு ஆபரேட்டருக்கு அழைத்தால் நிமிடத்திற்கு 6 பைசா வசூலிக்கப்படும். இன்று முதல் ஜியோவின் இந்த ‘கால்’ கட்டண முறை அமலுக்கு வந்துள்ளது.

இந்தியா முழுவதும் 4G சேவையை பயன்படுத்துபவர்களில் பெரும்பாலானோர் ஜியோ சேவையை பயன்படுத்தி வருகின்றனர். இலவச கால்கள், இணைய சேவை என அனைத்தையும் குறைந்த விலை பிளான்களில் வழங்கிவந்த ஜியோ, இனி அவுட்கோயிங் கால்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிவித்துள்ளது.

ஜியோ எண்ணிலிருந்து வேறு நெட்வொர்க்கிற்கு கால் செய்தால் இனி நிமிடத்திற்கு 6 பைசா வசூலிக்கப்படும் என்று அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. இதற்காக இனி 10 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை தனியாக ரீசார்ஜ் செய்யவேண்டும் எனவும் அறிவித்துள்ளது.

இலவசமாக கால் சேவைகளை வழங்கிவந்த ஜியோ நிறுவனம், கட்டணம் வசூலிக்கப்போவதாக கூறியுள்ளது அதன் வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன்னர், ஜியோ நிறுவனம் தொலைத்தொடர்புத் துறையில் பெரும் புரட்சியை நிகழ்த்தியது என்றே கூறலாம். மிகக்குறைவான அளவு இணைய சேவைக்கு அதிக கட்டணம் செலுத்திக்கொண்டிருந்த வாடிக்கையாளர்கள், ஜியோ வரவால் நல்ல பலன்களை அடைந்தனர்.

தனது குறைந்த கட்டண சேவையால், பெரும்பாலான வாடிக்கையாளர்களை தங்கள் பக்கம் இழுத்துள்ள ஜியோ, தற்போது கால் கட்டணத்தை உயர்த்தியது ஏன் என அந்நிறுவனமே விளக்கமளித்துள்ளது.

ஜியோ எண்ணிலிருந்து ஒருவர் மற்றொரு ஆபரேட்டர் எண்ணுக்கு அழைத்தால், அந்த வேறொரு நிறுவனம் ஜியோவிடமிருந்து நிமிடத்திற்கு 6 பைசா பெறும். இதற்கு இன்டர்கனெக்ட் பயன்பாட்டுக் கட்டணம் என்று பெயர். இந்த கட்டண முறையை TRAI எனப்படும் தகவல் தொழில்நுட்ப ஒழுங்குமுறை ஆணையம் வகுத்துள்ளது.

ஜியோவில் கால் கட்டணம் இல்லை என்பதால், ஜியோ நெட்வொர்க்கிக்கு ஜியோ அல்லாத நெட்வொர்க்குகளில் இருந்து மிஸ்டு கால்கள் கொடுக்கப்படுவதும், ஜியோ போனிலிருந்து அவுட்-கோயிங் கால்கள் அதிகம் செல்வதும் வாடிக்கையாகியுள்ளது. இதன் காரணமாக ஜியோ நிறுவனம் மற்ற நிறுவனங்களுக்கு அதிக கட்டணம் செலுத்தவேண்டியுள்ளது.

நாளொன்றுக்கு ஜியோவில் இருந்து 65-75 கோடி அவுட்கோயிங் கால்கள் செல்கின்றனவாம். இதனால், கடந்த 3 ஆண்டுகளில் மற்ற நெட்வொர்க்குகளுக்கு ரூ. 13,500 கோடி கட்டணமாக செலுத்தியுள்ளது ஜியோ.

அதனாலேயே, வேறு வழியின்றி இந்த கட்டணம் வசூலிக்கும் முடிவுக்கு வந்துள்ளதாக ஜியோ தரப்பு தெரிவிக்கிறது. இன்டர்கனெக்ட் பயன்பாட்டுக் கட்டணத்தை ட்ராய் ரத்து செய்தால், ஜியோவும் அவுட்கோயிங் கட்டணங்களை பழையபடி இலவசமாக வழங்கும் எனக் கூறப்படுகிறது.