India

மோடிக்கு கடிதம் எழுதிய இயக்குனர் மணிரத்னம் உள்ளிட்ட 50 பேர் மீதான தேசத்துரோக வழக்கு ரத்து!

நாட்டில் சிறுபான்மை மக்கள் மீது தொடர்ந்து நடத்தப்படும் தாக்குதல் சம்பவங்களை தடுக்க உறுதியான நடவடிக்கைகளை எடுக்குமாறு அடூர் கோபாலகிருஷ்ணன், மணி ரத்னம், அனுராக் காஷ்யப், அபர்ணா சென், கொங்கொனா சென் சர்மா, சவுமிதா சாட்டர்ஜி உள்பட 50 திரை பிரபலங்கள் கூட்டாக சேர்ந்து என பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினர். modi

இந்தக் கடிதத்துக்கு எதிராக பிஹார் மாநிலம், முசாபர்பூரைச் சேர்ந்த வழக்கறிஞர் சுதிர் குமார் ஓஜா என்பவர் அங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

அந்த வழக்கின் பேரில், நாட்டின் உருவாக்கத்தை சீர்குலைத்ததாகவும், பிரதமரின் செயல்திறனுக்கு களங்கம் ஏற்படுத்தியதாகவும் குற்றம்சாட்டப்பட்டு, அதனடிப்படையில், தேசத் துரோகம், மத உணர்வுகளை புண்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது.

இதற்கு அரசியல் கட்சியினர் மற்றும் ஜனநாயக அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், மணிரத்னம் உள்ளிட்ட 49 பேர் மீதான தேசத்துரோக வழக்கை திரும்பப்பெற பீகார் காவல்துறை முடிவு செய்துள்ளது.

49 பேர் மீது புகார் அளித்த நபர் தவறான தகவல்கள் அளித்ததை பீகார் காவல்துறை கண்டுபிடித்ததையடுத்து இந்த முடிவுக்கு வந்துள்ளது. இதனிடையே புகார் அளித்த வழக்கறிஞர் சுதிர் குமார் ஓஜா மீது 82வது சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்று பீகார் மூத்த போலிஸ் அதிகாரி தெரிவித்தார்.