India

பி.எம்.சி வங்கி முடக்கம் : ரூ. 2,500 கோடி மோசடி அம்பலம்., தனி விமானம், சொகுசு பங்களா சிக்கியது!

பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி இந்தியாவில் செயல்படும் சிறந்த கூட்டுறவு வங்கியாக இருந்தது. ஆனால் கடந்த 6 மாதங்களில் இந்த வங்கி கடும் நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. குறிப்பாக, வாராக்கடன் மதிப்பு 4,300 கோடி ரூபாயாக மாறியுள்ளது. அதனால் இந்த வங்கியின் நிர்வாகத் திறனை சரி செய்ய ரிசர்வ் வங்கி கடும் கட்டுப்பாடுகளை விதித்தது.

அதாவது, வாடிக்கையாளர்கள் அடுத்த 6 மாதத்திற்கு அதிகபட்சமாக ரூபாய் 1,000 மட்டுமே எடுக்கமுடியும் என உத்தரவிடப்பட்டு பின்னர் 10,000 ஆக அதிகரிக்கப்பட்டது. அதேபோல, புதிதாக எந்தக் கடனும் வழங்கக் கூடாது, டெபாசிட்களும் போடக்கூடாது என நிபந்தனை விதிக்கப்பட்டது.

இதனால் வங்கியில் சிறு சேமிப்பு மூலம் பணம் எடுத்து தொழில் செய்துவந்தவர்கள் கடும் சிரமம் அடைந்தனர். இதன் மூலம் பி.எம்.சி கூட்டுறவு வங்கி மீளமுடியாத அளவிற்கு கடந்த மூன்று வாரத்தில் முடங்கியுள்ளது.

இந்நிலையில், இந்த வங்கியில் இருந்து வீட்டு வசதி மேம்பாடு மற்றும் உள்கட்டமைப்பு நிறுவனமான எச்.டி.ஐ.எல் சுமார் 2,500 கோடி ரூபாய் கடன் பெற்றதும், அதில் முறைகேடுகள் நடந்துள்ளதும் அம்பலமானது.

ராகேஷ் வாதவான்

அதுமட்டுமல்லாமல், இந்த கடனை திருப்பி செலுத்தாமல் திட்டமிட்டு, முறைகேட்டில் ஈடுபட்ட இந்நிறுவனத்தின் இயக்குனர்கள், முறைகேடுக்கு உதவிய வங்கி அதிகாரிகள் மீது பொருளாதார குற்றப்பிரிவு போலிஸார் வழக்கு பதிந்துள்ளனர்.

இந்த நிறுவனத்தின் இயக்குனர்கள் ராகேஷ் வாதவான், சாரங் வாதவான் கைது செய்யப்பட்டுள்ளனர். இருவரின் பெயரில் உள்ள 3,500 கோடி மதிப்புள்ள சொத்துக்களை பொருளாதார குற்றப்பிரிவு போலிஸார் பறிமுதல் செய்தனர்.

இவர்களுக்கு மேலும் பல கோடி மதிப்புள்ள சொத்துக்கள் இருப்பதை பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இவர்களிடம் இருந்து ஏற்கனவே ஒரு தனி விமானத்தை பறிமுதல் செய்த நிலையில், மேலும் ஒரு விமானம் இருப்பதும் தெரிய வந்துள்ளது. இந்த விமானமும் இருவருக்கும் சொந்தமானது என உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து, மும்பை ராய்காட் மாவட்டத்தில் அலிபாக் என்ற பகுதியில் 2.5 ஏக்கர் பரப்பில் 22 அறைகளை கொண்ட மிகப்பெரிய சொகுசு பங்களா இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இந்த பங்களாவுக்கு அருகிலேயே அதிநவீன கப்பல் ஒன்றும் இருந்தது. எனவே, இவற்றை பறிமுதல் செய்யும் பணியில் பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.