India

சூப் கொடுத்து 6 பேரை கொன்ற கேரள பெண்: அதிரவைக்கும் 14 ஆண்டு பகீர் சம்பவம்!

கோழிக்கோட்டில் உள்ள கூடத்தாயி கிராமத்தைச் சேர்ந்தவர் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி டாம் தாமஸ். இவரது மனைவி ஓய்வு பெற்ற ஆசிரியை அண்ணம்மாள். இவர்கள் தங்களது மகன் ராய் தாமஸ் மற்றும் உறவினர்கள் மேத்யூ, ஆல்பன் உள்ளிட்ட பலருடன் கூட்டுக் குடும்பமாக வசித்து வந்தார்.

அதேப்பகுதியைச் சேர்ந்த ஜூலி, அவரது பெற்றோர் கட்டாயப்படுத்தியதால் டாம் தாமஸின் மகன் ராய் தாமஸை மணமுடிந்தார். திருமண வாழ்க்கை பிடிக்காமல் போன ஜூலிக்கு டாம் தாமஸின் அண்ணன் மகன் சாஜூ மீது பிரியம் ஏற்பட்டுள்ளது.

சாஜூவுக்கும் மீது அதே எண்ணம் உள்ளதை அறிந்துகொண்ட ஜூலி, அதற்கு தடையாக உள்ள குடும்பத்தினரை எப்படி சரிக்கட்டுவது என யோசித்த அவர், ஒட்டுமொத்த குடும்பத்தினரையும் கூண்டோடு அழித்துவிடலாம் என திட்டம் போட்டுள்ளார்.

அதற்காக நகைக்கடை ஒன்றில் பணிபுரியும் தனது நண்பரை நாடி அந்த நபரிடம் இருந்து சயனைடை வாங்கியுள்ளார் ஜூலி. டாம் தாமஸ் உள்ளிட்ட அனைவரும் இரவு உணவு உண்ட பிறகு சூப் சாப்பிடுவதை வழக்கமாக கொண்டிருந்ததால் அதனை பயன்படுத்தி மட்டன் சூப்பில் சயனைடு கலந்து கொடுக்க திட்டமிட்டுள்ளார்,

ஒரேடியாக அனைவரையும் தீர்த்துக்கட்டிவிட்டால் சந்தேகம் வந்துவிடும் என்பதால் இடைவெளி விட்டு ஒவ்வொரு நபராக கொலை செய்துள்ளார் ஜூலி. அதேச்சமயம், சொத்துகளையும் கைப்பற்றி விடவேண்டும் என்பதற்காகவும் இந்த செயலில் இறங்கியுள்ள ஜூலி முதலில் மாமியார் அண்ணம்மாளுக்கு 2002ம் ஆண்டு ஸ்கெட்ச் போட்டு கச்சிதமாக காரியத்தை அரங்கேற்றியுள்ளார்.

அதே பாணியில், மட்டன் சூப்பில் சயனைடை கலந்து 2008ல் மாமனார் டாம் தாமஸ், 2011ல் கணவர் ராய் தாமஸ் முறையே ஜூலி திட்டமிட்டபடி கொலை செய்திருக்கிறார். இதனையடுத்து, ஜூலி மீது அண்ணம்மாளின் சகோதரன் மேத்யூவுக்கு சந்தேகம் எழுந்ததால் போலிஸில் புகாரளித்த அவருக்கும் 2014ல் ஒரு மட்டன் சூப் கொடுத்து பிரச்னையை முடித்துவைத்திருக்கிறார் ஜூலி.

இவற்றையெல்லாம் முடித்த பிறகு, தனது கவனத்தை சாஜூவின் மனைவி சிலி மற்றும் அவரத் 10 மாதக் குழந்தையின் மீது திருப்பிய ஜூலி, 2016ம் ஆண்டு அதே போன்றதொரு மட்டன் சூப்பை கொடுத்து அவர்களது கதையையும் ஜூலி முடித்துள்ளார். அதன் பின்னர், 2017ம் ஆண்டு சாஜூவை மணந்த ஜூலி குடும்பத்தினரின் சொத்துகளையும் தன்னுடைய பெயருக்கு மாற்றிக் கொண்டுள்ளார்.

இந்நிலையில், சாஜூவின் மனைவி உயிரிழந்து ஒரு ஆண்டுக்கு கூட முடிவடையாத போது ஜூலியை திருமணம் செய்துக் கொண்டிருப்பது உறவினர்களிடையே சந்தேகத்தை கிளப்பியுள்ளது. இதற்கிடையில், ஜூலியின் மட்டன் சூப்பில் இருந்து வெளிநாட்டில் இருந்த ராய் தாமஸின் சகோதரர் மட்டுமே தப்பியிருந்தார்.

இதனையடுத்து, தனது குடும்பத்தினரின் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக ராய் தாமஸின் சகோததரரும், சிலியின் உறவினர்களும் போலிஸிடம் புகார் அளித்துள்ளனர். அதன் பிறகு உயிரிழந்தவர்களின் புதைக்கப்பட்ட உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகே மேற்குறிப்பிட்ட மட்டன் சூப் விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து ஜூலி, சாஜூ மற்றும் நகைக்கடை பணியாளரை பிடித்து போலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.