India

பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தை தனியாரிடம் விற்கும் மோடி அரசு: தரக்குறியீட்டை குறைப்பதாக ‘மூடிஸ்’ எச்சரிக்கை

பா.ஜ.க ஆட்சி அமைந்ததிலிருந்து பன்னாட்டு கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு ஏராளமான வரிச் சலுகை, கார்ப்ரேட்க்கு ஆதரவான டெண்டர், பொதுத்துறையை கார்ப்ரேட் வசம் ஒப்படைப்பு என பல உதவிகளை முனைப்புடன் செய்து வருகிறது.

மேலும் கார்ப்ரேட்டுக்கு ஆதரவாக ரயில்வே துறை மற்றும் அதன் அச்சகம் போன்றவற்றைத் தனியாருக்கு விற்கப்போவதாக நாடாளுமன்றத்திலேயே துணிந்து பா.ஜ.க அறிவித்துள்ளது. இதற்கு வரும் எதிர்ப்புகளை சற்றும் காதில் வாங்கிக் கொள்ளாமல் மெத்தனப்போக்குடன் பா.ஜ.க செயல்படுகிறது என பலர் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்நிலையில், நாட்டின் 2-வது பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனமாக, பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேசன் லிமிடெட் (பி.பி.சி.எல்) உள்ளது. நாட்டில் நுகரப்படும் மொத்த பெட்ரோலிய பொருட்களில், பாரத் பெட்ரோலியம் நிறுவனம் 21 சதவிகித பங்கைக் கொண்டிருக்கிறது. லாபத்திலும் இயங்கி வரும் இந்த மாபெரும் நிறுவனத்தை தனியார் மயமாக்க மோடி அரசு முடிவு செய்துள்ளது.

அதாவது, இந்த நிறுவனத்தில் மத்திய அரசுக்கு இருக்கும் 53.29 சதவிகிதப் பங்குகளைத் தனியாருக்கு விற்க, கடந்த செப்டம்பர் 30 அன்று அதன் முதலீட்டாளர்கள் குழு மூலம் ஒப்புதல் பெற்று, 2020 மார்ச் 31-ம் தேதிக்குள் பங்குகளை விற்று முடிக்க இலக்கும் நிர்ணயித்துள்ளது.

இந்நிலையில், பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் பங்குகளைத் தனியாருக்குவிற்பதன் மூலம், அந்த நிறுவனம் தனது மதிப்பீட்டை இழக்கும் என்று தரக் குறியீட்டு நிறுவனமான ‘மூடிஸ்’ எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து ‘மூடிஸ்’ நிறுவனம் தெரித்திருப்பதாவது, “தற்போதைய நிலையில், பொதுத்துறை நிறுவனமான பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேசன் லிமிடெட், ‘பிபிபி’(BBB) என்ற தரக் குறியீட்டைப் பெற்றுள்ளது.

இந்த நிலையில், அரசாங்கம் தனது முழு பங்குகளையும் ஒரு அரசு சாராத நிறுவனத்திற்கு விற்றால், நாங்கள் இனி பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேசன் லிமிடெட் (பி.பி.சி.எல்) நிறுவனத்தின் மதிப்பீட்டில் அரசாங்கத்தின் ஆதரவை சேர்க்க மாட்டோம்; இதன் விளைவாக நாங்கள் எந்த மாற்றங்களும் இல்லை என கருதி ‘Ba1’ என்று தரக்குறியீட்டை குறைப்போம்” என்று ‘மூடிஸ்’கூறியுள்ளது.

அதுமட்டுமன்றி, “ஒரு அரசானது இவ்வாறு தனது பங்குகளை விற்று, கடன் பத்திரத்தை மீட்க முயற்சிப்பதும், நாட்டை எதிர் மறையான கடனிலேயே தள்ளிவிடும். அரசாங்கம் தனக்குச் சொந்தமான பங்குகளை தனியாருக்கு விற்பது, சம்பந்தப்பட்ட பொதுத்துறை நிறுவனங்களின் தரத்தைக் குறைக்கும் என்றும் மூடிஸ் கூறியுள்ளது. என்றும் அறிவுறுத்தியுள்ளது.