India

“இந்தியா சர்வாதிகாரத்தை நோக்கி நகர்கிறது” - மோடி அரசை கடுமையாகச் சாடிய ராகுல் காந்தி!

பந்திப்பூர் புலிகள் சரணாலயத்தில் இரவு நேரத்தில் பயணிக்கத் தடை விதித்திருப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் வயநாடு எம்.பி-யான ராகுல் காந்தி பங்கேற்றார்.

அப்போது அவர் பேசியதாவது, “தேசிய நெடுஞ்சாலை 766-ல் இரவு நேரங்களில் பயணிக்க உள்ள தடையை நீக்கவேண்டும் என்பதில் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றுபட்டு உள்ளன. இந்தத் தடை காரணமாக கர்நாடகா, கேரளா மாநிலங்களைச் சேர்ந்த மக்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்” எனத் தெரிவித்தார்.

மேலும், கும்பல் வன்முறை குறித்து மோடிக்கு கடிதம் எழுதிய பிரபலங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பது குறித்துப் பேசிய அவர், “இந்த தேசத்தில் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பது ஒவ்வொருவருக்கும் தெரியும். இந்த உலகிற்கே தெரியும். பிரமதர் மோடிக்கு எதிராகவோ அல்லது மத்திய அரசுக்கு எதிராகவோ யாரேனும் பேசினால் அவர்களைச் சிறையில் தள்ளும் நிலை உள்ளது.

பா.ஜ.க-வுக்கு எதிராகப் பேசும் ஊடகங்கள் நசுக்கப்படுகின்றன. இந்த தேசம் சர்வாதிகாரத்தை நோக்கி நகர்கிறது. இது ஒன்றும் ரகசியம் இல்லை. தெள்ளத் தெளிவாகவே தெரிகிறது.

இந்த தேசத்தில் 2 விதமான சித்தாந்தங்கள் இருக்கின்றன. ஒன்று இந்த தேசத்தை ஒரு மனிதர்; ஒரு சித்தாந்தம் ஆளவேண்டும்; மற்றவர்கள் வாய்மூடி இருக்கவேண்டும் என்று விரும்புவது. மற்றொன்று, முதலாவதற்கு எதிராகப் பேசும் காங்கிரஸ் கட்சியும், மற்ற எதிர்க்கட்சிகளும் நம்பும் சித்தாந்தம்.” எனத் தெரிவித்தார் ராகுல் காந்தி.