India

''நமது ஹெலிகாப்டரை நாமே சுட்டு வீழ்த்தியது மிகப் பெரிய தவறு'' - இந்திய விமானப்படை தளபதி

`இந்தியாவின் எம்.ஐ 17 ரக ராணுவ ஹெலிகாப்டரை இந்திய ஏவுகணைதான் தவறுதலாகச் சுட்டுவிட்டது’ என இந்திய விமானப்படை தளபதி ராகேஷ் குமார் தெரிவித்துள்ளார்.

கடந்த பிப்ரவரி மாதம் 14ம் தேதி காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் பயணித்த பேருந்து மீது, வெடிமருந்துடன் தீவிரவாதி ஒருவன் மோதி தற்கொலைப் படை தாக்குதல் நடத்தியதில் 44 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய விமானப்படை, பாகிஸ்தான் எல்லையில் புகுந்து பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது குண்டுகளை வீசி அழித்தது. இதையடுத்து பாகிஸ்தான் ராணுவம் இந்தியா மீது நடத்த வாய்ப்புள்ளதாக கூறப்பட்டதை அடுத்து இருநாட்டு எல்லையில் போர் பதற்றம் நிலவி வந்தது.

இதனால் இந்திய எல்லைப்பகுதி இரவு பகலாக இந்திய விமானப்படையால் கண்காணிக்கப்பட்டு வந்தது. பிப்ரவரி 27 அன்று இந்திய விமானப் படையின் எம்.ஐ 17 ரக ஹெலிகாப்டர் ஒன்று விபத்தில் சிக்கியது. இதில், ஹெலிகாப்டரில் பயணம் செய்த விமானி உட்பட 6 பேர்கள் உயிரிழந்தனர். பழிவாங்கும் விதமாக ஹெலிகாப்டரை பாகிஸ்தான் ராணுவம் சுட்டு வீழ்த்தியதாக கூறப்பட்டது.

ஆனால், இதுதொடர்பாக நடைபெற்ற விசாரணையில், இந்திய விமானப் படையின் எம்.ஐ 17 ரக ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்தியது இந்திய வீரர்கள் எனத் தெரிய வந்தது. 5 விமானப்படை வீரர்களை குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்து, அவர்களுக்கான தண்டனை விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய இந்திய விமானப்படை தளபதி ராகேஷ் குமார் சிங் பதோரியா, "இந்திய ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டது மிகப் பெரிய தவறு என்பதை ஒப்புக்கொள்கிறோம். இந்திய ஏவுகணைதான் ஹெலிகாப்டரை தவறுதலாகச் சுட்டுவிட்டது.

இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட இரண்டு அதிகாரிகள் மீது துறைரீதியிலான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வரும்காலங்களில் இதுபோன்ற தவறு நடக்காமல் இந்திய விமானப்படை எச்சரிக்கையுடன் செயல்படும்” என தெரிவித்தார்.