India

கார்டு மூலம் பெட்ரோல், டீசல் வாங்குபவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த சலுகைகள் நிறுத்தம் - SBI அறிவிப்பு!

கடந்த 2016ம் ஆண்டு இறுதியில் பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட போது டிஜிட்டல் பணப்பரிவா்த்தனையை ஊக்குவிக்கும் வகையில் பொதுத் துறை பெட்ரோல் நிலையங்களில் கிரெடிட் கார்ட் மூலம் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள் நிரப்புபவா்களுக்கு 0.75% தள்ளுபடி என்கிற சலுகை கிடைத்து வந்தது.

இந்நிலையில், இந்த சலுகை வரும் 1ம் தேதி முதல் கிடைக்காது என்று எஸ்.பி.ஐ நிறுவனம் அறிவித்துள்ளது. இது தொடா்பாக வாடிக்கையாளர்களுக்கு அந்த நிறுவனம் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளது.

அதில், ''வாடிக்கையாளர்களே, பொதுத்துறை எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்களின் அறிவுறுத்தலின்படி, 1 லிட்டர் பெட்ரோலுக்கு வழங்கப்பட்டுவரும் 0.75% தள்ளுபடி என்கிற சலுகை வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் நிறுத்தப்படுகிறது'' இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து அனைத்து வங்கி கிரெடிட் கார்டு வாடிக்கையாளா்களுக்கும் இந்த சலுகை நிறுத்தப்படுகிறது. ஆனால் டெபிட் கார்டு மற்றும் இணைய வழி பணப் பரிவர்த்தனைக்கான சலுகை தொடரும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இந்திய அரசாங்கம் கேட்டுக்கொண்டதன் பேரில் இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்கள் இந்த சலுகையை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வந்தன.

இதனால், மூன்று பெட்ரோல் நிறுவனங்களும் 2017- 2018ம் ஆண்டில் வாடிக்கையாளர்களுக்கு ரூ.1,165 கோடியையும் வங்கி நிறுவனங்களுக்கு ரூ.266 கோடியையும் வழங்கி வந்தன. 2018- 2019 ஆண்டில் இப்போதே ரூபாய் 2000 கோடியை தாண்டிவிட்டதாக கூறப்படுகிறது. இதனால், பெட்ரோல் நிறுவனங்கள் இந்த சலுகையை நிறுத்த முடிவு செய்ததாகக் கூறப்படுகிறது.