India

“1.76 லட்சம் கோடி போதாது; இன்னும் 30,000 கோடி வேண்டும்” - ரிசர்வ் வங்கியை துடைத்தெறியும் மத்திய அரசு!

நடப்பு நிதியாண்டுக்குள் ரிசர்வ் வங்கியிடம் இருந்து மேலும் 30,000 கோடி ரூபாய் டிவிடென்ட் கேட்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மிக மோசமான சரிவைச் சந்தித்துள்ள நிலையில், மத்திய அரசுக்கு கூடுதல் நிதி தேவைப்படுகிறது. இதற்காக ரிசர்வ் வங்கியின் உபரி நிதி 1 லட்சத்து 76 ஆயிரம் கோடியை மத்திய அரசு பெறுகிறது.

தொடர் பொருளாதார சரிவை சமாளிக்கும் வகையில் ரிசர்வ் வங்கியின் உபரி நிதியை கட்டாயப்படுத்தி பெற்றது மத்திய அரசு. இந்த நிதி அவசரகாலத்திற்கு மட்டுமே பயன்படுத்தப்படும். ஆனால் இதைப் பெற்ற பின்பும் கூட நிதி நிலைமை சரியாகவில்லை.

கடந்த நிதியாண்டில் ரிசர்வ் வங்கி மத்திய அரசுக்கு 28,000 கோடியை ஈவுத்தொகையாக (Dividend) வழங்கியது. 2017-2018 நிதியாண்டில் 10,000 கோடி ஈவுத்தொகையாக வழங்கப்பட்டது. நடப்பு நிதியாண்டில் 30,000 கோடி ரூபாய் கேட்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக, அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நடப்பு நிதியாண்டில் ரிசர்வ் வங்கியிடம் இருந்து மத்திய அரசு இடைக்கால ஈவுத்தொகையாக ரூபாய் 25,000 கோடி முதல் 30,000 கோடி வரை பெறத் திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து வரும் ஜனவரி மாதம் முடிவு செய்யப்படவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.