India

“பொருளாதார சரிவிலிருந்து நாட்டைக் காப்பாற்ற ஒரே ஒருவர்தான் இருக்கிறார்...” - சிறையிலிருந்து ப.சிதம்பரம்

“இந்தியாவை பொருளாதார சரிவில் இருந்து காப்பாற்ற ஒருவர் இருக்கிறார் என்றால் அது டாக்டர். மன்மோகன் சிங் மட்டுமே” எனத் தெரிவித்துள்ளார் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம்.

காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ.,யால் கைது செய்யப்பட்டு, திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக, பா.ஜ.க அரசின் போதாமைகள் பற்றியும், தவறான முடிவுகள் குறித்தும் தொடர்ந்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வந்தார் ப.சிதம்பரம். அவர் சிறைக்குச் சென்ற நிலையில், அவரது ஆலோசனைப்படி அவரது குடும்பத்தினர் அவரது ட்விட்டர் பக்கத்தை நிர்வகித்து வருகின்றனர்.

ப.சிதம்பரத்தின் சார்பில் அவரது குடும்பத்தினர் தற்போது ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் பிறந்தநாளை முன்னிட்டு, அவருக்கு வாழ்த்துக் கூறி ப.சிதம்பரத்தின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

மேலும், “ பா.ஜ.க அரசு மன்மோகன் சிங்கின் யோசனைகளைக் கேட்கவேண்டும் என நான் வலியுறுத்துகிறேன். இந்தியாவை தற்போதைய பொருளாதார சரிவில் இருந்து மீட்க சரியான வழியை ஒருவரால் காட்டமுடியும் என்றால், அது மன்மோகன் சிங் மட்டுமே” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்ந்து, “பொருளாதார சரிவிற்கான முக்கியமான காரணத்தைப் புரிந்து கொள்ளாமல் இருப்பது தான் அரசின் செயல்பாடுகளில் இருக்கும் அடிப்படைத் தவறு. தேவைக் குறைபாடு, வேலைவாய்ப்புகள், ஊதியம் ஆகியவற்றின் வளர்ச்சி மீதான அவநம்பிக்கை ஆகியவையே பெரிய பிரச்னையாக உள்ளது.” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.