India

தலித் என்பதால் எம்.பி-யை ஊருக்குள் அனுமதிக்க மறுத்த கிராம மக்கள் : கர்நாடகாவில் அதிர்ச்சி!

பா.ஜ.க மூத்த தலைவரும் சித்ரதுர்கா தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான நாராயணசாமி, இரு தினங்களுக்கு முன்னர், மத்திய அரசின் திட்டத்தின் கீழ் வீடற்றவர்களுக்கு வீடு கட்டித் தருவதற்காக தும்கூர் மாவட்டத்திலுள்ள கோலாரஹட்டி கிராமத்துக்குச் சென்றுள்ளார். அவருடன் இணைந்து அதிகாரிகளும் சென்றுள்ளனர்.

எம்.பி., நாராயணசாமி கிராமத்துக்குச் சென்றபோது, கிராம மக்கள் அவரை கிராமத்துக்குள் அனுமதிக்க மறுத்துள்ளனர். அவர் தலித் என்பதால் கிராமத்திற்குள் அனுமதிக்க முடியாது எனத் தெரிவித்த அவர்கள் தலித் மக்கள் எங்கள் கிராமத்துக்குள் அனுமதிக்கப்படுவதில்லை என்று விளக்கமளித்துள்ளனர். நாராயணசாமியுடன் வந்திருந்தவர்கள் எதற்காக வந்துள்ளோம் என்பதை விளக்க முயற்சி செய்துள்ளனர். இருப்பினும், கிராம மக்கள் அவரை உள்ளே அனுமதிக்க மறுத்துவிட்டனர்.

இதுகுறித்துப் பேசிய எம்.பி., நாராயணசாமி, ''காவல்துறையின் உதவியுடன் கட்டாயமாக கிராமத்துக்குள் நுழைய நான் விரும்பவில்லை. அவர்களுடைய மனதில் மாற்றம் வரவேண்டும் என்று விரும்புகிறேன். அவர்களுக்கு எதிராக நான் வழக்குப் பதிவு செய்யப்போவதில்லை. அவர்களுடைய மனதில் மாற்றம் வரவேண்டியது முக்கியம். சட்டத்தால் அதனை மாற்ற முடியாது’ எனத் தெரிவித்தார்.

தலித் என்பதால் ஆளும் கட்சியின் எம்.பி-யையே, பா.ஜ.க ஆளும் மாநிலத்தின் கிராம மக்கள் அனுமதிக்காத சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.