India

ஸ்டாண்ட்அப் காமெடியன்களின் தொழில் நஷ்டத்திற்கு காரணம் நிதியமைச்சரின் பத்திரிகையாளர் சந்திப்புதான்!?

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க அரசு இரண்டாவது முறையாகப் பொறுப்பேற்றது முதலே, நாட்டின் பொருளாதாரம் கடும் சரிவைச் சந்தித்து வருகிறது. மோடி ஆட்சிக்கு வந்து 100 நாட்கள் நிறைவடைந்த நிலையில், ஆட்டோமொபைல் நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு உற்பத்தி துறைளும் கடும் பாதிப்பைச் சந்தித்துள்ளன.

இந்நிலையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “இளம் தலைமுறையினர் ஓலா, ஊபர் போன்ற தனியார் நிறுவன வாடகை கார்களை அதிக அளவில் பயன்படுத்துவதுதான் மோட்டார் வாகன விற்பனையில் ஏற்பட்டுள்ள சரிவுக்குக் காரணம்” என்று கூறினார்.

இதையொட்டி, சமூக வலைதளங்களில் பலரும் தங்கள் கருத்துகளை பதிவிட்டுள்ளனர். பெரும்பாலானோர், நிர்மலா சீதாராமன் தெரிவித்த காரணத்தை கிண்டல் செய்யும் வகையில் #SayItLikeNirmalaTai என்ற ஹேஷ்டேக்கில் பதிவிட்டு வருகின்றனர்.

“மக்கள் இணையத்தில் சுற்றுலா தளங்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பார்த்துவிடுவதால், சுற்றுலாத்துறை வீழ்ச்சி அடைந்துள்ளது" எனப் பதிவிட்டுள்ளார் ஒருவர்.

”ஸ்டாண்ட் அப் காமெடியன்கள் எல்லோரும் நஷ்டமடைந்து வருகிறார்கள். ஏனெனில், எல்லோரும் அதற்குப் பதிலாக பா.ஜ.க-வின் பத்திரிகையாளர் சந்திப்புகளை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்” என ஒருவர் பதிவிட்டுள்ளார்.

“நாட்டின் ஐ.க்யூ லெவல் குறைந்துள்ளது; ஏனெனில் எல்லா அமைச்சர்களும் வாட்ஸ்-அப் உபயோகிக்கின்றனர்.” என ஒருவர் பதிவிட்டுள்ளார்.