India

“பெண்களுக்கு இலவச மெட்ரோ ரயில் சேவை” : கெஜ்ரிவால் அறிவிப்புக்கு அதிருப்தி தெரிவித்த உச்ச நீதிமன்றம்!

டெல்லி மாநிலத்துக்கு விரைவில் சட்டப்பேரவை பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி, வாக்காளர்களை கவரும் வகையில் டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் பல்வேறு அதிரடி அறிவிப்புகளை அவ்வப்போது அறிவித்து வந்தார்.

குறிப்பாக பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பணிபுரியும் பெண்களுக்கென மெட்ரோ ரயில்களில் இலவச பயணம், மாநிலம் முழுவதும் இலவச வைஃபை, குடிநீர் வரி பாக்கி தள்ளுபடி என பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில், மெட்ரோ ரயிலில் பெண்களுக்கு இலவச சேவை என்ற கெஜ்ரிவாலின் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து மேத்தா என்ற நபர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடுத்திருந்தார்.

இந்த வழக்கு மெட்ரோ ரயில் கட்டட பணிகளை கண்காணித்து வரும் நீதிபதி அருண் மிஸ்ரா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மேத்தாவின் மனுவை ஆராய்ந்த நீதிபதிகள், அர்விந்த் கெஜ்ரிவாலின் அறிவிப்பால் மெட்ரோ நிர்வாகத்துக்கு ஆண்டுக்கு 1500 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்படும் என்றும், இதன் மூலம் மெட்ரோ ரயில் பராமரிப்பு, விரிவாக்கம் மற்றும் வசதிகள் கடுமையாக பாதிக்கப்படும் என கருத்து தெரிவித்தனர்.

இலவசம் என்ற பெயரில் மக்களின் வரிப்பணத்தை டெல்லி அரசு வாரி இறைக்கக் கூடாது என்றும், கவனமாக செலவிட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர். மேலும், டெல்லியில் 4ம் கட்ட மெட்ரோ பணிக்காக மத்திய அரசு டெல்லி அரசுக்கு ரூ.600 கோடி வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளனர்.