India

“விண்டோஸ் கணினியை பயன்படுத்துகிறீர்களா?” : சைபர் குற்றங்கள் பற்றிய அதிர்ச்சி தகவலை வெளியிட்ட Quick Heal!

இந்தியாவில் அதிகரித்துவரும் இணைய சேவை மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. அதன் தாக்கம் இந்தியாவில் உள்ள கிராமங்களிலும் பரவி வருகின்றன. எளிதாக கைக்குக் கிடைக்கக்கூடிய இணைய சேவைகள் சில நேரங்களில் மக்களுக்கு எதிராக பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக இந்தியாவில் ஆன்லைன் மூலம் நிகழும் மோசடி சம்பவங்கள் அதிகரித்துள்ளது.

இணையப் பாதுகாப்பு பற்றி அரசுக்குப் போதிய அக்கறை இல்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இதனை உறுதி செய்யும் விதமாக பெரிய அளவில் இந்தியாவில் இணையதளக் குற்றங்கள் அதிகரித்துள்ளதாக இணைய பாதுகாப்பு நிறுவனமே தெரிவித்துள்ளது.

இந்தியாவில் உள்ள இணையப் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மென்பொருள் நிறுவனமான குயிக் ஹீல் ஆண்டுதோறும் இந்தியாவில் உள்ள இணையதள பாதுகாப்பு மற்றும் எதிர்கொள்ள வேண்டிய முடிவு குறித்து அறிக்கை வெளியிட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக 2019-ம் ஆண்டுக்கான அறிக்கையை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாடு முழுவதும் ஒவ்வொரு நிமிடத்துக்கும் 1,852 இணையதளக் குற்றங்கள் நடப்பதாகவும், அந்த குற்றங்கள் பெரும்பாலும் மும்பை, டெல்லி, கொல்கத்தா மற்றும் பெங்களூரு ஆகிய நான்கு நகரங்களில் அதிகமாக நடப்பதாகவும் கூறப்படுகிறது.

அதனையடுத்து மஹாராஷ்ட்ரா, டெல்லி, மேற்கு வங்கம் ஆகிய மூன்று மாநிலங்களில் அதிகளவில் இணையதள குற்றங்கள் அரங்கேறியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர். இந்தக் குற்றங்கள் அனைத்தும் கடந்த ஒரு வருடத்தில் மட்டுமே நடைபெற்றவையாகும்.

மேலும், விண்டோஸில் இயங்கும் கணினிகளைக் குறிவைத்து நடப்பதாகவும், கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 97.3 கோடி குற்றங்கள் விண்டோஸ் இயங்குதளத்தில் செயல்படும் கனிணிகளில் மட்டும் நடைபெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஹேக் நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு மிக முக்கிய காரணம் தேவையில்லாத ஆப் மற்றும் மென்பொருட்களைப் பயன்படுத்துவது தான் என்று குயிக் ஹீல் நிறுவனத்தின் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

சமீபத்தில் கூட ட்விட்டர் நிறுவனத்தின் சிஇஓ ஜாக் டோர்சியின் ட்விட்டர் கணக்கை மர்ம நபர்கள் ஹேக் செய்தனர். அதேபோல இந்தியாவில் பல பிரபலங்களின் வங்கிக் கணக்குகளும் கூட ஹேக் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சைபர் குற்றங்களைத் தடுக்க அரசுகள் போதிய அளவில் செயலாற்றவில்லை என்பதே உண்மை.