India

புல்வாமா தாக்குதலுக்கு உளவுத்துறையின் குளறுபடியே காரணம் - சி.ஆர்.பி.எஃப் அறிக்கை!

கடந்த பிப்ரவரி மாதம் காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் பயணித்த பேருந்து மீது, வெடிமருந்துடன் தீவிரவாதி ஒருவன் மோதி தற்கொலைப் படை தாக்குதல் நடத்தினான். இதில் 44 இந்திய வீரர்கள் மரணம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானின் ஜெய்ஷ்-இ- முகமது தீவீரவாத அமைப்பு பொறுப்பேற்றது.

இதுகுறித்து சி.ஆர்.பி.எப் மேற்கொண்ட விசரணையை அறிக்கையாக தயாரித்து சி.ஆர்.பி.எஃப் படையின் இயக்குநர் ஜெனரலிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், ''புல்வாமா தாக்குதலில் 40 வீரர்கள் பலியானதற்கு உளவுத்துறையின் குறைபாடுகளே காரணம். வழக்கமாக விடப்படும் எச்சரிக்கை மட்டுமே விடப்பட்டது. ஆனால், கார் மூலம் தற்கொலைப் படை தாக்குதல் சம்பவம் தொடர்பான எவ்வித எச்சரிக்கையும் கொடுக்கப்படவில்லை.

காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள எந்தவொரு உளவுத்துறை அமைப்புகளும் தாக்குதல் தொடர்பான எந்தவித எச்சரிக்கையும் கொடுக்கவில்லை. சி.ஆர்.பி.எஃப் வீரர்களின் கான்வாய் வழக்கத்திற்கு மாறாக அதிக அளவில் ஒரே நேரத்தில் சென்றது தீவிரவாதிகளுக்கு சாதகமாக அமைந்தது'' இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

மேலும், பணியில் இருந்த பாதுகாப்பு வீரர் ஒருவர் தற்கொலைப்படை வாகனத்தை நிறுத்த முயற்சித்து அது தோல்வியில் முடிந்ததும் சி.ஆர்.பி.எஃப் வீரர்களின் கான்வாயில் இருந்த கேமராவில் பதிவாகியுள்ளது.

முன்னதாக புல்வாமா தாக்குதலுக்கு உளவுத்துறையின் தோல்வி காரணமல்ல என்று உள்துறை அமைச்சகம் எழுத்துப்பூர்வமாக தெரிவித்து இருந்தது. இந்நிலையில், அதற்கு நேர்மாறாக தற்போது சி.ஆர்.பி.எஃப்.பின் அறிக்கை வந்துள்ளது.