Representational image
India

“தலித், முஸ்லிம்களுக்கு சொத்துகளை விற்கக்கூடாது” : காலனி நிர்வாகம் வெளியிட்ட துண்டறிக்கையால் சர்ச்சை!

பா.ஜ.க ஆட்சி செய்யும் குஜராத் மாநிலத்தில் சிறுபான்மையினர் மற்றும் தலித் மக்கள் மீதான வன்முறை நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. எல்லா தரப்பு மக்களும் வசிக்கும் பகுதிகளில் சிறுபான்மையினர் மற்றும் தலித் மக்களுக்கு எதிராக சாதி - மத பாகுபாடுகளை உருவாக்கும் விதமாக ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க-வினர் செயல்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.

இந்நிலையில் கடந்த வாரம், குஜராம் மாநிலம் நர்மதா மாவட்டம் நண்டோட் தாலுகாவுக்கு உட்பட்ட வாடியா கிராமத்தில் குடியிருப்பு காலனி ஒன்று உள்ளது. இந்த காலனியின் நிர்வாகமானது, காலனி நடவடிக்கை, விழா காலத்தில் செய்யவேண்டியவை மற்றும் காலனியில் குடியிருப்போருக்கு அறிவுறுத்தல் என்ற பெயரில் துண்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில், “காலனியில் சொத்து உள்ளவர்கள் தங்கள் சொத்துக்களை, தலித் மற்றும் முஸ்லிம்களுக்கு விற்கக்கூடாது” என்று குறிப்பிட்டுள்ளனர். அதேபோல தலித் மக்களுக்கு எதிராக வேறுபல உத்தரவுகளையும் பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், வாடியா காலனி நிர்வாகம் வெளியிட்ட துண்டறிக்கை சமூகவலைதளங்களில் பரவி பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஆவேசமடைந்த சமூக ஆர்வலர்களும், தலித் செயற்பாட்டாளர்களும், இது அப்பட்டமான தீண்டாமை மற்றும் சாதியப் பாகுபாடு என்று குற்றம்சாட்டியதுடன், வாடியா காலனி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தி போராட்டம் நடத்தியுள்ளனர்.

மேலும், இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் கடிதம் ஒன்றை அளித்துள்ளனர். அந்தக் கடிதத்தைப் பெற்றுக்கொண்ட ஆட்சியர் உரிய விசாரணை நடத்தி, இதுபோல சாதியப் பாகுபாடுகளை கடைபிடிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி அளித்ததாகக் கூறப்படுகிறது.