India
வாக்காளர் அட்டையில் திருத்தமா? : எளிதாக மேற்கொள்ள மொபைல் ஆப் அறிமுகம்!
வாக்காளர் பட்டியலில் திருத்தங்களை வாக்காளர்களே மொபைல் செயலி மூலம் மேற்கொள்ளும் வகையில் திட்டம் செயல்படுத்தப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், சென்னை மாவட்டத்தில் உள்ள சட்டப்பேரவை தொகுதிகளின் வாக்காளர்கள் நாளை முதல் புதிய செயலியைப் பயன்படுத்தி தங்கள் விவரங்களில் திருத்தங்களை அவர்களே மேற்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் வெளியிட்டுள்ள அறிவிப்பு பின்வருமாறு :
“இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டப்பேரவை தொகுதிகளில் வாக்காளர்கள், வாக்காளர் பட்டியலில் உள்ள தங்கள் விவரங்களில் திருத்தங்களை அவர்களே சிறப்பு செயலி மூலம் மேற்கொள்ளும் திட்டம் (Electoral Verification Programme) 01.09.2019 முதல் 30.09.2019 வரை ஒரு மாத காலத்திற்குச் செயல்பட உள்ளது.
இத்திட்டத்தின் மூலம் வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் உள்ள அவர்களது பெயர், பிறந்த தேதி, முகவரி, புகைப்படம் மற்றும் பாலினம் உள்ளிட்ட விவரங்களில் திருத்தங்களை அவர்களே மேற்கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்காக வாக்காளர் உதவி கைபேசி செயலி (NVSP mobile App), இணையதளம் (nvsp.in), வாக்காளர் உதவி மையத்தில் உள்ள வாக்காளர் பதிவு அலுவலகம் மற்றும் இ-சேவை மையம் ஆகியவற்றின் மூலம் வாக்காளர்கள் தனது வாக்காளர் புகைப்பட அடையாள எண்ணை உள்ளீடு செய்து தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஆவணங்களில், ஒன்றைக் கொண்டு திருத்த விவரங்களைப் பதிவேற்றம் செய்யலாம்.
அவ்வாறு, வாக்காளர்களால் பதிவு செய்யப்பட்ட விவரங்கள் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் (B.L.O.) கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு திருத்தங்கள் சரிபார்க்கப்பட்டு 15.10.2019 அன்று வெளியிடப்படவிருக்கும் ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியலில் வெளியிடப்படும்.
மேலும் 02.11.2019 (சனி), 03.11.2019 (ஞாயிறு), 09.11.2019 (சனி) மற்றும் 10.11.2019 (ஞாயிறு) ஆகிய நாட்களில் அந்தந்த வாக்குச்சாவடிகளில் நடைபெறவுள்ள சிறப்பு முகாம்கள் வாயிலாகவும் வாக்காளர்கள் திருத்தங்களை மேற்கொள்ளலாம். எனவே, வாக்காளர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!