India

“அந்த மருத்துவர் மீது நடவடிக்கை எடுங்கள்; இல்லையேல் என் மகளைக் கொன்றுவிடுங்கள்” : தாய் உருக்கமான கடிதம்!

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஸ்வர்ணலதா என்ற பெண் தனது மகளை கருணைக்கொலை செய்ய அனுமதி கோரி ஆந்திர மாநில ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

ஆந்திர மாநிலம் விஜயவாடாவைச் சேர்ந்தவர் ஸ்வர்ணலதா. அவருக்கு ஜானவி என்ற மகள் உள்ளார். ஜானவி 4 வயது முதலே மனநிலை பாதிக்கப்பட்டவர். தற்போது அவருக்கு 19 வயது. அவரைக் கருணைக் கொலை செய்ய அனுமதி வழங்குமாறு ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ளார் ஸ்வர்ணலதா.

அவர் எழுதியுள்ள கடிதத்தில், தமது கணவர் மருத்துவ உதவியாளராகப் பணிபுரியும் மருத்துவமனையில் பல ஆண்டுகளாக மகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது என்றும் சமீபத்தில் அங்கு தலைமை மனநல மருத்துவராகப் பொறுப்பேற்ற ராஜ்யலட்சுமி என்னும் மருத்துவர் அங்கு தொடர்ந்து சிகிச்சையளிக்க மறுத்துவிட்டதாகவும் ஸ்வர்ணலதா தெரிவித்துள்ளார்.

இதனால் அந்த மனநல மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் அல்லது தனது மகளை கருணைக் கொலை செய்ய அனுமதிக்க வேண்டும் எனக் கோரி ஸ்வர்ணலதா ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

முன்னதாக, ஜானவியின் பெற்றோர் மருத்துவர் ராஜ்யலட்சுமிக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, தொடர்ந்து சிகிச்சை பெற அனுமதி பெற்றும் ராஜ்யலட்சுமி, நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் இருந்துவந்துள்ளார். இதையடுத்தே, ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ளார் ஸ்வர்ணலதா.

பெண் குழந்தையின் தாயே கருணைக் கொலை செய்யக்கோரி ஆளுநருக்கு கடிதம் எழுதிய நிகழ்வு அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.