India

ரிசர்வ் வங்கியில் இருந்து தன் இஷ்டத்துக்கு பணம் எடுக்கும் பா.ஜ.க : பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை

ரிசர்வ் வங்கியின் கையிருப்புத் தொகையிலிருந்து ரூபாய் 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி மத்திய அரசுக்கு வழங்கப்படவிருக்கிறது. இது குறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மத்திய அரசுக்கு ரூ.1,76,051 கோடியை வழங்க மத்திய வங்கியின் வாரியம் முடிவு செய்துள்ளது. இந்தத் தொகை குறிப்பிட்ட தவணைகளில் மத்திய அரசுக்கு வழங்கப்படும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர்களான ரகுராம் ராஜன், உர்ஜித் படேல் ஆகியோர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டதும் ரிசர்வ் வங்கியின் கையிருப்பில் பா.ஜ.க அரசைக் கைவைக்க விடாமல் தடுத்து வந்த காரணத்தால் தான். தற்போது, பொருளாதார நிபுணத்துவமற்ற ஐஏஎஸ் அதிகாரியான சக்தி காந்த தாஸை ரிசர்வ் வங்கி ஆளுநராக நியமித்து தங்கள் காரியத்தைச் சாதித்துள்ளது பா.ஜ.க.

உபரி தொகையை அரசுக்கு வழங்குவது தற்போது முதல்முறையல்ல. ஆனால், இந்தளவுக்கு முதலுக்கே மோசம் செய்யும் வகையில் இதுவரை அள்ளிக் கொடுக்கப்பட்டதில்லை. இந்தச் செயல் ரிசர்வ் வங்கியின் நம்பகத்தன்மையைக் குலைத்து மிகப்பெரிய பொருளாதாரச் சீரழிவுக்கு வழிவகுக்கப் போகிறது என பொருளாதார நிபுணர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

ரிசர்வ் வங்கியின் கையிருப்பு என்பது ஒருவகையில் தேசத்திற்கான இன்சூரன்ஸ் போன்றது. பெரும் நெருக்கடி நிலை அல்லது பேரிடர் சமயங்களில் பயன்படுத்தும் வகையிலான பாதுகாப்புப் பெட்டி. தற்போதைய சூழலில் அந்தப் பணத்தைப் பெறவேண்டிய தேவை மத்திய அரசுக்கு இல்லை. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வரி விலக்கு அளித்தும், வாராக்கடன்களின் மூலமும் இழந்த பல்லாயிரம் கோடி ரூபாயை சரிக்கட்ட, மக்களுக்கான இந்தப் பணத்தில் கை வைத்திருக்கிறது அரசு.

ரிசர்வ் வங்கி விதிமுறைகளைச் சிதைக்கும் விதமாக இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. எப்படியென்றால், ரிசர்வ் வங்கியின் மொத்த இருப்புத்தொகையில், 5.5% முதல் 6.5% வரை இருந்தால் போதும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தாண்டு 6.8% அதிகம் என்பதால் அதிகமான 0.3% தொகையைப் பெறாமல், குறைந்தபட்ச அளவான 5.5% இருந்தால் போதுமென 1.3% தொகையான 52,637 கோடி பெறப்பட்டுள்ளது.

நாணயம் மற்றும் தங்க மறுமதிப்பீட்டு கணக்கைப் பொறுத்த சிஜிஆர்ஏ அளவு, ரிசர்வ் வங்கியின் இருப்பில் 23.3% ஆக இருக்கிறது. இது 20 முதல் 24.5% வரை இருக்கலாம் என்பது நடைமுறை. தற்போது பா.ஜ.க அரசு, குறைந்தபட்ச அளவான 20% போதும் எனத் தீர்மானித்து 1,23,414 கோடி ரூபாயைப் பறித்துள்ளது.

கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாராளம் காட்டி ஊழல் செய்வதில் மும்முரம் காட்டும் பா.ஜ.க அரசு, அந்த இழப்பை ஈடுகட்டும் வகையில் பேரிடர் காலத்தில் பயன்படுத்துவதற்கான தொகையைக் கைப்பற்றியுள்ளது. இது மேலும் பொருளாதாரச் சீரழிவுக்கு வழிவகுக்கும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.