India

“இனி இது எதுக்கு இங்க?” : சட்டப்பேரவை மாற்றப்பட்டதும் நாற்காலிகளை வீட்டுக்கு எடுத்துச் சென்ற சபாநாயகர்!

ஆந்திர சட்டப்பேரவை நாற்காலிகளை வீட்டுக்கு எடுத்துச் சென்றது தொடர்பாக முன்னாள் சபாநாயகர் கோடல்ல சிவபிரசாத் மீது 2 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சந்திரபாபு நாயுடு ஆட்சியின் போது ஆந்திர சட்டப்பேரவை சபாநாயகராக கோடல்ல சிவபிரசாத் இருந்துவந்தார். இவர் சபாநாயகராக இருந்தபோது ஒன்றுபட்ட ஆந்திர பிரதேசம் ஐதராபாத்தை தலைநகராகக் கொண்டு செயல்பட்டு வந்தது. அந்த சட்டப்பேரவையில் இருந்த பொருட்களை அமராவதிக்கு கொண்டு வரும்போது சட்டப்பேரவைக்குச் சொந்தமான நாற்காலிகள் போன்ற சில பொருட்களை சபாநாயகர் அவரது சொந்த பயன்பாட்டிற்கு வீட்டிற்கு எடுத்துச் சென்றதாகக் கூறப்பட்டது.

இதனையடுத்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஜெகன்மோகன் ரெட்டி முதல்வராகப் பதவியேற்று கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் ஆகியிருக்கும் நிலையில், முன்னாள் சபாநாயகர் கோடல்ல சிவபிரசாத் நாற்காலிகளை சொந்த வீட்டில் வைத்துப் பயன்படுத்திவருவதாக புகார் எழுந்தது. இந்தப் புகாரை கையில் எடுத்த ஜெகன்மோகன் ரெட்டி இதுகுறித்து நடவடிக்கை எடுக்க அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அவரது உத்தரவின் பேரில் சட்டப்பேரவை அதிகாரிகள் குண்டூரில் உள்ள சிவபிரசாத்தின் வீடுகளுக்குச் சென்று சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையில் சட்டப்பேரவைக்குச் சொந்தமான நாற்காலிகள் அங்கு இருப்பதை அதிகாரிகள் உறுதி செய்தனர். இதனையடுத்து சட்டப்பேரவை அலுவலக செயலாளர் ஈஸ்வர்ராவ் துல்லூர் காவல் நிலையத்தில் முன்னாள் சபாநாயகர் கோடல்ல சிவபிரசாத் மீது புகார் அளித்தார்.

பின்னர் இதுதொடர்பாக முன்னாள் சபாநாயகர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசும்போது, நாற்காலிகளை தனது சொந்த பயன்பாட்டிற்காக வீட்டிற்கு எடுத்துச் சென்றதாக ஒப்புக்கொண்டார். மேலும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் அதனைத் திருப்பி ஒப்படைக்கத் தயாராகி இருப்பதாகவும், இது தொடர்பாக சட்டப்பேரவை அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், தற்போது சட்டப்பேரவை அலுவலக செயலாளர் கொடுத்த புகாரின் அடிப்படையில் முன்னாள் சபாநாயகரின் மீது 409, 411 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். முன்னதாக குண்டூர் திறன் மேம்பாட்டு பயிற்சி மையம் அமைப்பதற்காக வழங்கப்பட்ட 29 மடிக்கணினிகளை முன்னாள் சபாநாயகர் கோடல்ல சிவபிரசாத்தின் மகன் கோடல்ல சிவராம் அபகரித்து வைத்திருப்பதாக டி.ஆர்.டி.ஏ அதிகாரிகள் சத்தினபல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.