India
"தமிழ் பாடல்கள் பாடினால் அடிப்போம்" - திருவிழாவில் அஜித் பட பாடல் பாடிய தமிழர்களை தாக்கிய கன்னட அமைப்பு!
கர்நாடக மாநிலம் பெங்களுருவில் உள்ள ஜெகஜீவன்ராம் நகரில் மாரியம்மன் கோயில் உள்ளது. அங்கு ஆடி வெள்ளி திருவிழா கடந்த 16ம் தேதி நடைபெற்றது. இதையொட்டி இசைக்கச்சேரி நிகழ்ச்சிக்கு அப்பகுதி மக்கள் ஏற்பாடு செய்திருந்தனர். மேலும், இசைக்கச்சேரிக்கு காவல்துறையிடம் உரிய அனுமதி பெறப்பட்டு இருந்தது.
விழா முதலில் நன்றாக சென்று கொண்டிருந்தது. ஆனால், இசைக்கச்சேரியில் தமிழ்பாடல்கள் பாடப்பட்ட பின் பிரச்னை தொடங்கியது. கன்னட ரக்ஷிண வேதிகா என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் தமிழ் பாடல்கள் பாடப்படுவதற்கு எதிராக வன்முறையில் ஈடுபட்டனர்.
மேடையில் வேதாளம் படத்தின் ''ஆலுமா டோலுமா'' பாடல் பாடப்பட்டுக் கொண்டிருந்தது. அப்போது திடீரென பாடிக்கொண்டு இருந்தவர்களை கன்னட அமைப்பினர் தாக்க தொடங்கினர். மேலும், அங்கு வைக்கப்பட்டிருந்த ஸ்பீக்கர்கள், இருக்கைகள் ஆகியவற்றை சேதப்படுத்தினர். இதை தட்டிக்கேட்டவர்களையும் தாக்கினர்.
மேலும், ''கர்நாடகத்தில் தமிழ்ப்பாடல்களை பட அனுமதிக்க முடியாது, தமிழ்ப்பாடல்களை பாடினால் இந்த கதிதான் ஏற்படும்'' என்று மிரட்டியுள்ளனர். ''கன்னடத்தை கற்றுக்கொள் இல்லையேல் தமிழகத்திற்கு ஓடிவிடு'' என்று கூச்சலிட்டவாறே அங்கிருந்து சென்றுள்ளனர்.
சம்பவத்தின் போது காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போதும், எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கைக்கட்டி வேடிக்கை பார்த்தனர் என அங்கிருந்தோர் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக ஜெகஜீவன்ராம் நகர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கன்னடம் மற்றும் தமிழ் மக்கள் தங்களுக்குள் இணக்கமாக இருந்தாலும் இனவெறியை தூண்டி பிழைப்பு நடத்தும் சில சமூக விரோதிகள் அவ்வப்போது இது போன்ற தாக்குதல்களை நடத்தி ஒற்றுமையை சீர்குலைக்க சதி செய்கின்றனர்.
இது போன்ற இனவெறி கும்பலை கர்நாடக அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று தமிழ் அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த அமைப்பினர் தொடர்ந்து தமிழர் விரோதப்போக்கை கடைபிடித்து வருகின்றனர். இந்த சம்பவம் கர்நாடாவில் வாழும் தமிழர்களிடையே அச்சத்தை விதைத்துள்ளது.
Also Read
-
கையை கட்டிக்கொண்டு இருக்க முடியுமா? : ஆளுநர் வழக்கில் உச்சநீதிமன்றம் சரமாரிக் கேள்வி!
-
”தமிழ்நாட்டில் இரு மடங்கு அதிகரித்த பட்டு உற்பத்தி” : பெருமையுடன் சொன்ன அமைச்சர் தா.மோ.அன்பரசன்!
-
கருப்பு சட்ட மசோதா : “எதிர்க்கட்சிகளை அழிக்க நினைக்கும் மட்ட ரகமான உத்தி இது” - ஜவாஹிருல்லா கண்டனம்!
-
குலசேகரப்பட்டினம் ஏவுதளத்துக்காக ரூ.985.96 கோடி நிதி ஒதுக்கீடு! : கனிமொழி எம்.பி.க்கு ஒன்றிய அரசு பதில்!
-
”அப்பட்டமான கருப்புச் சட்டம்” : அரசியல் சட்டத் திருத்த மசோதாவுக்கு கி.வீரமணி கண்டனம்!