India

கல்லெறி திருவிழாவில் கற்கள் தாக்கி 100க்கும் மேற்பட்டோர் காயம் - வேடிக்கை பார்த்த பா.ஜ.க முதல்வர் !

உத்தரகாண்ட் மாநிலத்தில், நீதிமன்ற விதிகளை மீறி நடைபெற்ற கல்லெறித் திருவிழாவில் நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

உத்தரகாண்ட் மாநிலத்தின் சம்பாவத் மாவட்டத்திலுள்ள தேவிதுரா கோவிலில் ஆண்டுதோறும் ரக்ஷாபந்தன் தினத்தை முன்னிட்டு ‘பக்வால்’ எனப்படும் கல்லெறித் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

பக்தர்கள் தேவிதுரா கோவில் தேவியை மகிழ்விக்கும் விதமாக இந்தக் கல்லெறி திருவிழாவில் ஈடுபடுவார்கள். பாரம்பரிய வழக்கப்படி, சாமியால், கஹர்வால், ஓல்கியா மற்றும் லம்கேரியா ஆகிய நான்கு உள்ளூர் மக்கள் இரண்டு குழுக்களாகப் பிரிந்து, ஒருவருக்கொருவர் கற்களால் தாக்கத் தொடங்குவார்கள். இந்த கல்லெறித் திருவிழா தலைமை பூசாரியின் சொல்படி நிறைவடையும்.

நேற்று நடைபெற்ற கல்லெறித் திருவிழாவில் ஏராளமானோர் கலந்துகொண்டு, கற்களை ஒருவர் மீது ஒருவர் வீசிக்கொண்டனர். இந்த கல்லெறி நிகழ்வில் வீசப்பட்ட கற்கள் தாக்கி பத்து நிமிடங்களில் சுமார் நூற்றுக்கும் அதிகமான பேர் காயமடைந்தனர்.

திருவிழாவின் போது கற்களைப் பயன்படுத்த உயர்நீதிமன்றம் தடை விதித்திருந்தாலும், விதிகளை மீறி இந்தத் திருவிழா நடத்தப்பட்டது. நேற்று நடைபெற்ற திருவிழாவில் பா.ஜ.க-வை சேர்ந்த முன்னாள் முதல்வர் பகத்சிங் கோஷ்யாரி உள்ளிட்ட பா.ஜ.க-வினர் பலரும் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

முற்காலத்தில், கடவுளுக்கு பலி கொடுக்கும் விழாவில், ஒரு மூதாட்டி தன் பேரனைத் தவிர பலிகொடுக்க தன்னிடம் எதுவும் இல்லை என மன்றாடியதால் கடவுள் அவரைக் காப்பாற்றியதாக அந்த ஊரில் ஒரு கதை நிலவுகிறது. அந்தக் கதையின் வழியாக கடவுளுக்கான தியாகமாக மக்கள் ரத்தம் சிந்தவேண்டும் என்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள் அந்த ஊர் மக்கள். மூடநம்பிக்கையால் தொடர்ந்து நடைபெறும் இந்த கல்லெறி திருவிழாவை தடுத்து நிறுத்தவேண்டும் என மனித உரிமை ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.