India

ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப்பிரிவுகள் 370 மற்றும் 35ஏ ஆகியவற்றை ரத்து செய்தும், ஜம்மு காஷ்மீரை சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாகவும், லடாக் பகுதியை சட்டப்பேரவையில்லா யூனியன் பிரதேசமாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி அறிவித்தது.

இதனையடுத்து, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் காஷ்மீர் மசோதா மீதான விவாதங்கள் நடத்தப்பட்டன. எதிர்க்கட்சி உறுப்பினர்களின் பலத்த எதிர்ப்புக்கு மத்தியில், மாநிலங்களவையில் பா.ஜ.க மசோதாவை நிறைவேற்றியது. பின்னர் மக்களவையிலும் தனது பெரும்பான்மையைப் பயன்படுத்தி மசோதாவை நிறைவேற்றியது பா.ஜ.க.

காஷ்மீர் விவகாரம் தொடர்பாக சட்டப்பிரிவுகள் ரத்து மற்றும் ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு உள்ளிட்ட 4 மசோதாக்களுக்கும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்து நேற்று இரவு அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில், காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து, மற்றும் இரண்டாக பிரிப்பதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தேசிய மாநாடு கட்சி சார்பில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

தேசிய மாநாடு கட்சியின் மூத்த தலைவர்கள் முகமது அக்பர் லோனே, ஹஸ்னைன் மசூதி ஆகியோர் தொடர்ந்த வழக்கில், ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு மற்றும் சிறப்பு சட்டப்பிரிவுகள் ரத்து செய்யப்பட்டது தொடர்பான குடியரசுத் தலைவர் ஒப்புதல் அரசியல் சாசனத்துக்கு முரணானது என அறிவிக்கக் கோரியுள்ளனர்,