India

காஷ்மீர் சிறப்பு சட்டப்பிரிவை நீக்க மசோதா எதற்கு? அரசாணையே போதும் - மத்திய அரசுக்கு சட்டத்துறை ஆலோசனை!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் எப்போதும் இல்லாத அளவுக்கு ராணுவ வீரர்களை பாதுகாப்புக்காக குவித்திருக்கிறது மத்திய அரசு.

பாகிஸ்தான் ராணுவமும், பயங்கரவாதிகளும் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக வந்த செய்தியை அடுத்து உஷார் நிலையில் இருக்க மத்திய உளவுத்துறை எச்சரித்திருந்ததாகவும் அதற்காகவே பல்லாயிரக் கணக்கில் பாதுகாப்புக்காக ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டிருப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்தது.

உண்மையில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு 1954ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தான சட்டப்பிரிவு 370 மற்றும் 35ஏ பிரிவை நீக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதால், இது தொடர்பான அரசாணை பிறப்பித்தால் காஷ்மீரில் வன்முறை வெடிக்க வாய்ப்புள்ளதாலேயே அம்மாநில முழுவதும் ராணுவ வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது என தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.

இந்த நிலையில், காஷ்மீருக்கான சிறப்பு அதிகாரமாக சட்டப்பிரிவுகளை நீக்க தனியாக நாடாளுமன்றத்தில் மசோதா போன்று எதுவும் நிறைவேற்ற தேவை இல்லை என மத்திய அரசுக்கு சட்டத்துறை ஆலோசனை வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குடியரசுத் தலைவரின் தனி அதிகாரம் மூலம் காஷ்மீருக்கு 370,35ஏ சட்டப்பிரிவு செயல்படுத்தப்பட்டதால் அதனை நீக்குவதற்கு மத்திய அரசு அரசாணை பிறப்பித்தால் மட்டும் போதுமானது என்றும் இதற்கு மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் தேவை இல்லை எனவும் சட்டத்துறை ஆலோசனை வழங்கியுள்ளது.

இதற்கிடையில், காஷ்மீரில் இருந்து பல்வேறு மாநிலத்தில் இருந்து படிக்க வந்துள்ள மாணவர்களும் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். தேசிய தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் படித்துவரும் 120 மாணவர்களை அழைத்து வருவதற்கு ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநில அரசு டெல்லியில் இருந்து அதிகாரிகளையும், பேருந்துகளையும் காஷ்மீருக்கு அனுப்பி வைத்துள்ளது.

இந்த நிலையில், காஷ்மீர் மாநில விவகாரம் குறித்து விவாதிப்பதற்காக நாளை காலை 9.30 மணியளவில் மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் அவசரமாக கூடவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.