India

பள்ளி கழிவறையில் குழந்தைகளுக்கு உணவு சமைத்த அவலம்: அதில் தவறில்லை என நியாயப்படுத்தும் அமைச்சர்!

மத்தியப் பிரதேச மாநிலத்தில் சிவபுரி என்ற மாவட்டத்தில் அங்கன்வாடி மையம் ஒன்று உள்ளது. அப்பகுதியை சேர்ந்த குழந்தைகள் 20-க்கும் மேற்பட்டோர் அங்கு படித்துவருகிறார்கள, . அங்கு உணவு சமைப்பதற்கு சமையலறை இல்லாததால், அங்கன்வாடியில் உள்ள கழிவறையில் உணவு சமைத்து குழந்தைகளுக்கு விநியோகிக்கப்படும் அவல நிலை தெரியவந்துள்ளது.

உணவு சமைக்க பயன்படுத்தப்படும் பாத்திரங்கள், பொருட்கள், சிலிண்டர் மற்றும் அடுப்பு என அனைத்தும் கழிவறையில் வைக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் இதுதொடர்பான செய்தி ஊடகங்களில் வெளிவந்து விவாதத்தை கிளப்பியது. பல தரப்பில் இருந்தும் கடும் கண்டனங்கள் எழுந்தன.

இதனையடுத்து இந்த சம்பவத்திற்கு அம்மாநில அரசு பதில் அளிக்கவேண்டும் என கோரிக்கை எழுந்தது. அதே போல் பதிலும் வந்தது. ஆனால், அந்த பதில் கூடுதலாக கோபத்தை கிளப்பும் விதமாக இருந்தது. ” கழிவறையில் வைத்து சமைப்பதில் தவறு எதுவும் இல்லை” என அம்மாநில தகவல் தொடர்புத் துறை அமைச்சர் இமார்தி தேவியின் சர்ச்சை பேச்சு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், "வீட்டில் குளியலறையும் கழிவறையும் இருப்பதால் உறவினர்கள் தங்களது வீட்டில் சாப்பிட மறுப்பார்களா?. குளியறையில் பாத்திரம் வைக்கலாம். கழிவறையில் உணவு சமைப்பதால் குழந்தைகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. கழிவறை கோப்பைக்கும், சமையல் செய்யும் அடுப்புக்கும் இடையே தடுப்பு வைக்கப்பட்டுள்ளது. அதனால் எந்த பிரச்னையும் இல்லை” என அசரடிக்கும் வகையில் பேசியிருக்கிறார்.

அவரின் இந்த விளக்கம் பெற்றோர், பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரின் இந்த பதிலுக்கு சமூக வலைதளங்களில் கண்டனங்கள் குவிந்துவருகிறது. இப்படிப்பட்ட அமைச்சர்கள் இருக்கும் ஓர் அரசு, நடத்தும் பள்ளிகளில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அனுப்பி படிக்க வைக்க அஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளது.