India

“இவர்கள் அரசுப் பள்ளிகளில் தமிழ் வழியில் படித்தவர்கள் தான்...” : உலகம் வியக்கும் இஸ்ரோ தமிழர்கள்!

இஸ்ரோவை பெருமை கொள்ளச் செய்த இரு தமிழர்கள் உலக அளவில் தமிழகத்தின் பெருமையையும் நிலைநாட்டியுள்ளனர். இஸ்ரோவின் தொடர் விண்வெளிச் சாதனைகளுக்குப் பின்னணியில் இரண்டு தமிழர்களின் மிகப்பெரும் பங்கு இருக்கிறது.

2008-ம் ஆண்டு விண்ணில் ஏவப்பட்ட சந்திரயான் 1 திட்டப்பணிகளில் மயில்சாமி அண்ணாதுரை மிகச்சிறப்பாகப் பணியாற்றியதைப் போலவே, தற்போது விண்ணில் பாய்ந்திருக்கும் சந்திரயான் 2 திட்டப்பணிகளில் சிறப்பாகச் செயல்பட்டிருக்கிறார் இஸ்ரோ தலைவர் கே.சிவன்.

இருவருக்குமிடையேயான ஒற்றுமை இருவரும் தமிழர்கள் என்பது மட்டுமல்ல; இருவருமே பின்தங்கிய கிராமங்களிலிருந்து வந்தவர்கள். மயில்சாமி அண்ணாதுரை, கோவை கிணத்துக்கடவு அருகேயுள்ள கோதவாடி எனும் கிராமத்தைச் சேர்ந்தவர். கே.சிவன் கன்னியாகுமரி மாவட்டத்தின் மேல சரக்கல்விளை கிராமத்தைச் சேர்ந்தவர்.

இருவருமே அரசுப் பள்ளிகளில் தமிழ் வழிக் கல்வியில் படித்தவர்கள்; இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்தின் மிக உயர்ந்த பொறுப்பை எட்டியவர்கள். சந்திரயான் 1 திட்ட இயக்குநராக மயில்சாமி அண்ணாதுரை பணியாற்றி வெற்றிகரமாக சந்திரயானை விண்ணில் ஏவியதே தமிழர்கள் பெருமைகொள்ளக் காரணமாக அமைந்தது.

இன்று இஸ்ரோவுக்கே தலைவர் கே.சிவன் எனும் தமிழர். அதுபோக, சந்திரயான் 2 திட்ட இயக்குநராகப் பணியாற்றிய வனிதாவும் தமிழர் தான். இஸ்ரோவில் திட்ட இயக்குநராகப் பணியமர்த்தப்பட்ட முதல் பெண் எனும் பெருமைக்கும் சொந்தக்காரர் வனிதா.

இவர்கள் தவிர திருநெல்வேலியில் உள்ள மகேந்திரகிரியில் இஸ்ரோவுக்காக கிரையோஜெனிக் என்ஜின்கள் தயாரிக்கும் பணிகளிலும் பல தமிழர்கள் ஈடுபட்டுள்ளனர். இஸ்ரோவிலும் பல தமிழர்கள் முக்கியப் பணியாற்றிவருகின்றனர். அரசு பள்ளிகளில் தமிழ் வழிக் கல்வி பயின்று விண்வெளிச் சாதனைகளில் தமிழகத்தைப் பெருமைகொள்ளச் செய்துவரும் இந்த ஆராய்ச்சியாளர்கள் போதும் தமிழகம் மும்மொழிக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்க.