India
மோடி ஆட்சியில் வெகுவாக அதிகரித்த பாலியல் குற்றங்கள் : நாடாளுமன்றத்தில் பா.ஜ.க அமைச்சர் ஒப்புதல்!
மோடி ஆட்சியில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்கொடுமை மற்றும் குற்றச் சம்பவம் அதிகளவில் நடைபெறுவதாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும் பெண்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் பெரும்பாலும் பா.ஜ.க ஆட்சி செய்யும் மாநிலங்களிலேயே அதிகரித்துள்ளது.
பெண்கள் மீது நடத்தப்படும் தாக்குதலில் முதல் இடத்தில் பா.ஜ.க ஆட்சி செய்யும் உத்தர பிரதேச மாநிலம் உள்ளது. இந்த தகவலை மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் நாடாளுமன்ற கூட்டத்தில் பேசிய ஸ்மிருதி இரானி, “பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாப்பதற்கான ‘போக்சோ’ சட்டம் 2012- ல் திருத்தம் கொண்டுவர மத்திய அமைச்சரவை, கடந்த ஜூலை 10ம் தேதி ஒப்புதல் அளித்தது. ஏற்கெனவே, நிர்பயா உள்ளிட்ட சட்டங்களும் பெண்கள் பாதுகாப்பிற்காக இருக்கின்றன. எனினும், இந்தியாவில் பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல்களும் பாலியல் வல்லுறவுக் குற்றங்களும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய அவர், மாநில வாரியாக 2014 முதல் 2019 வரை, பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் வழக்குகள் குறித்த புள்ளி விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளதாகவும், இதில், உத்தர பிரதேசம், டெல்லி, ஹரியானா, ராஜஸ்தான், பீகார் ஆகிய மாநிலங்களில்தான் பாலியல் குற்றங்கள் அதிகமாக நடைபெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அதிகபட்சமாக உத்தர பிரதேசத்தில் 2014 முதல் 2019 வரை 6,906 பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் நடப்பு ஆண்டில் இதுவரையிலான காலத்தில் மட்டும் பெண்களுக்கு எதிரான பாலியல் வழக்குகள் 550 பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார். இதன்மூலம், பா.ஜ.க ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பற்ற சூழலில் வாழும் அவல நிலையில் உள்ளார்கள் என்பதை பா.ஜ.க அமைச்சரே ஒப்புக்கொண்டுள்ளார்.
முன்னதாக பெண்களின் பாதுகாப்பிற்காக கொண்டுவரப்பட்ட ‘நிர்பயா நிதி’ ஒதுக்கீட்டிலிருந்து, வெறும் 20 சதவிகித அளவிலான தொகை மட்டுமே தற்போதுவரை செலவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய அரசே தனது அறிக்கையில் தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
பா.ஜ.க ஆட்சியில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு பெரும் கேள்விக்குறியாகியுள்ளது என பெண்கள் அமைப்பினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
Also Read
-
“அமலாக்கத்துறை நடத்தும் அவதூறுப் பிரச்சாரத்தை சட்டப்படி எதிர்கொள்வேன்” : அமைச்சர் கே.என்.நேரு பதிலடி!
-
தேசிய நீர் & நீர் பாதுகாப்பில் பொதுமக்கள் பங்களிப்பு விருதுகள்.. முதல்வரிடம் மாவட்ட ஆட்சியர்கள் வாழ்த்து!
-
23 சட்டமன்ற தொகுதிகளில் சிறு விளையாட்டு அரங்கங்கள்.. கட்டுமானப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர்!
-
ரூ.98.92 கோடி செலவில் மேம்படுத்தப்பட்ட மீன்பிடி துறைமுகங்கள் திறப்பு : 68,300 மீனவர்கள் பயன்!
-
கள்ளக்குறிச்சி : பெற்றோரை இழந்துவாடும் 4 குழந்தைகளையும் அரவணைத்துக் கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!