India

“தென்னக ரயில்வேயில் நடப்பது மாபெரும் அநீதி” : மக்களவையில் திருமாவளவன் பேச்சு!

தென்னக ரயில்வேயில் வடமாநிலத்தோர் அதிக அளவில் பணி நியமனம் செய்யப்பட்டிருப்பது தொடர்பாக மக்களவையில் பேசினார் வி.சி.க தலைவர் திருமாவளவன் எம்.பி.,

மக்களவையில் நேற்றுப் பேசிய தொல்.திருமாவளவன் எம்.பி., பேசியதாவது, “நான் தென்னக ரயில்வேயில் நடைபெறும் சில பிரச்னைகளை உங்கள் கவனத்துக்குக் கொண்டுவர விரும்புகிறேன். தென்னக ரயில்வே பணி நியமனங்களில் அந்தந்த மாநிலங்களைச் சார்ந்தவர்களுக்கே 80% வழங்க வேண்டும் என சட்டம் இருக்கிறது. ஆனால், அண்மையிலே திருச்சி பொன்மலை பகுதியில் அப்ரண்டிசிப் பயிற்சிக்காக தேர்வு நடைபெற்றது. அதில் 1,765 பேர் தேர்வு செய்யப்பட அறிவிப்புச் செய்யப்பட்டிருந்தது. அதில் வடமாநிலங்களைச் சார்ந்த 1,600 பேருக்கு வாய்ப்பு தரப்பட்டிருக்கிறது.

தமிழ்நாட்டில் 165 பேர் மட்டுமே வாய்ப்பை பெற்றிருக்கிறார்கள். இந்த ஓரவஞ்சனை ஏன் நடக்கிறது என்பதை ரயில்வே துறை அமைச்சர் கவனிக்க வேண்டும். இது குறித்து ஒரு ஆய்வை நடத்த வேண்டும்.

தமிழ் படித்த மாணவர்களைவிட பிற மாநிலங்களைச் சார்ந்த தமிழ் தெரியாத மாணவர்கள் தமிழ் பாடத்தில் அதிக மதிப்பெண்கள் பெற்றிருக்கிறார்கள் என்பது எவ்வளவு பெரிய அதிர்ச்சியான தகவல் என்பதை அவைத்தலைவர் புரிந்துகொள்ள வேண்டும். எனவே, எழுத்துத் தேர்விலும் அங்கே ஊழல் முறைகேடுகள் நடக்கின்றன.

திட்டமிட்டு வடமாநிலங்களைச் சார்ந்தவர்களுக்கு தமிழ்நாட்டில் வேலை வாய்ப்பு தரப்படுகிறது. தமிழ்நாட்டைச் சார்ந்தவர்களுக்கு அந்த வாய்ப்பு மறுக்கப்படுகிறது. இது ஒரு மாபெரும் அநீதி. இதை அமைச்சர் கவனத்துக்கு எடுத்துக்கொண்டு தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல அந்தந்த மாநிலத்தைச் சார்ந்தவர்களுக்கு அங்கே முன்னுரிமை தர வேண்டும்.

அந்தந்த பிராந்திய மொழியைச் சார்ந்தவர்கள் இல்லாமல், பிற மாநிலத்தைச் சார்ந்த, ஆங்கிலமும் தெரியாதவர்கள் பணியில் இருக்கிற காரணத்தால் மொழிச் சிக்கலின் மூலம் விபத்துகள் ஏற்படுகின்றன. வேலைவாய்ப்பில் அந்தந்த மாநிலத்தைச் சார்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளித்து பணிநியமனங்களை செய்ய வேண்டும்.” என வலியுறுத்தியுள்ளார்.