India

“உங்க சாப்பாடு உண்மையிலேயே தரமானதா?” : உணவுக் கலப்படத்தில் முன்னிலை வகிக்கும் தமிழகம்!

2018-19ம் ஆண்டுகளில் இந்தியாவில் கலப்படம் குறித்து நடத்தப்பட்ட சோதனையில் மூன்றில் ஒரு பங்கு உணவு கலப்படம் செய்யப்பட்டது எனத் தெரியவந்துள்ளது. அதிகம் கலப்படம் செய்யப்படும் மாநிலங்களில் உத்தரப்பிரதேசம் மற்றும் தமிழகம் முன்னிலை வகிக்கின்றன.

இந்தியாவில் உணவு தரம் குறித்தும், அதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் நேற்று நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கேள்வி எழுப்பப்ட்டது. இதற்கு மத்திய உணவு மற்றும் நுகர்வோர் துறை அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார்.

அதில் கூறப்பட்டுள்ளதாவது, இந்தியா முழுவதும் உணவுகளின் தரம் குறித்து இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் மூலம் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. அதில் 99,000 உணவு மாதிரிகளில் 24,000 உணவுகள் கலப்படம் மிகுந்து அல்லது தரமற்றதாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட 5,730 உணவு சோதனைகளில் 2,601 சோதனைகள் தோல்வியடைந்துள்ளதாக இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது.

உணவுக்கலப்பட தடுப்பு சட்டங்களில் கடுமை இல்லாததால், கடுமையான தண்டனைகள் அளித்து கலப்படத்தைத் தடுக்கும் வகையில் மத்திய அரசு நுகர்வோர் பாதுகாப்பு மசோதா கொண்டு வருகிறது.

உணவுப் பொருட்களின் தரம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை மேம்படுத்துவதிலும், தர நிர்ணயத்தில் அரசு மேலும் கவனம் கொள்வது அவசியம் எனவும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.