India

“அணை உடைஞ்சதுக்கு நண்டு தான் காரணம்” - அமைச்சர் விளக்கம்!

மகாராஷ்டிர மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை அதி தீவிரமடைந்து பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்த கனமழையால் செவ்வாயன்று திவாரே அணை தனது கொள்ளளவை எட்டிய நிலையில், திடீரென அணை உடைந்து அணை நீர் வெள்ளமாக பாய்ந்து வெளியேறியது. அணையை ஒட்டியுள்ள திவாரே உள்ளிட்ட 7 கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின. இதில், வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு இதுவரை 18 பேர் உயிரிழந்தாக அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், மகாராஷ்டிர மாநில நீர்வளத்துறை அமைச்சர் தானாஜி சாவந்திடம் அணை உடைப்பு பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், ''அணையில் அதிக எண்ணிக்கையில் நண்டுகள் இருந்ததே இந்த உடைப்புக்கு காரணம் என்றும், அணை உடைப்புக்கு முந்தைய நாளில் மட்டும், கனமழையால் அணையின் நீர்மட்டம் 8 மீட்டருக்கு உயர்ந்ததாகவும் தெரிவித்தார்.

அமைச்சரின் விளக்கம் குறித்துப் பேசிய காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் நவாப் மாலிக், அணையைக் கட்டிய கான்ட்ராக்டரை காப்பாற்றுவதற்காக அமைச்சர் அப்பாவி நண்டுகள் மீது பழிபோடுவதாகத் தெரிவித்தார். இதுதொடர்பாக முறையே விசாரணை நடத்தி, தண்டனை வழங்கவேண்டும் எனவும் அவர் கூறினார்.