India

“வந்தே மாதரத்தை ஏற்க மறுப்பவர்களுக்கு இங்கு வாழ உரிமை இருக்கிறதா?” - பாஜக அமைச்சர் பேச்சு!

ஒடிசா மாநிலத்திலிருந்து நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சாமியார் பிரதாப் சந்திர சாரங்கி மத்திய இணை அமைச்சராக நியமிக்கப்பட்டார். ‘ஒடிசாவின் மோடி’ என பா.ஜ.க-வினரால் வர்ணிக்கப்படும் இவரது கடந்த காலம் கருப்புப் பக்கங்கள் நிறைந்தது.

1999-ம் ஆண்டு, ஆஸ்திரேலியப் பாதிரியார் கிரஹாம் ஸ்டெயின்ஸும் அவரது இரு மகன்களும் எரித்துக் கொல்லப்பட்ட நேரத்தில், பஜ்ரங் தள் அமைப்பின் ஒடிசா மாநிலத் தலைவராக இருந்தவர்தான் இந்த பிரதாப் சந்திர சாரங்கி.

2002-ல் ஒடிசா சட்டமன்றம் வலதுசாரி இயக்கங்களால் தாக்கப்பட்டு தீவைக்கப்பட்ட வன்முறைச் சம்பவத்தில் கைதாகி சிறைக்குச் சென்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. வன்முறைச் செயல்களின் பின்னணியில் செயல்பட்ட இவர்தான் இன்றைக்கு ‘ஒடிசாவின் மோடி’ என்றழக்கப்படுகிறார்.

வன்முறைகளின் மூலம் புகழ்பெற்ற சாமியார் பிரதாப் சாரங்கிக்கு முதல்முறை எம்.பி-யானதுமே இணை அமைச்சர் பதவியைக் கொடுத்ததோடு, குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் விவாதத்தையும் தொடங்கி வைக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டது அக்கட்சி யாருக்கானது என்பதை தெளிவுபடுத்துகிறது.

நேற்று நாடாளுமன்றத்தில், குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் விவாதத்தைத் தொடங்கி வைத்துப் பேசினார் சாரங்கி. அப்போது அவர், “வந்தே மாதரத்தை ஏற்க மறுப்பவர்களுக்கும், நாட்டைப் பற்றிக் கவலைப்படாதவர்களுக்கும் இந்த நாட்டில் வாழ உரிமை இருக்கிறதா?” எனக் கேள்வி எழுப்பினார்.

மேலும் பேசிய அவர், பாரத மாதாவுக்கு எதிராக யாராவது இருந்தால் அவர்கள் மன்னிக்கப்பட மாட்டார்கள் எனவும் தெரிவித்துள்ளார். பிரதாப் சந்திர சாரங்கியின் இந்தப் பேச்சுக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.