India

குஜராத் ராஜ்யசபா தேர்தல் : காங்கிரஸ் மனுவுக்கு பதிலளிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவு! 

அண்மையில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில், பா.ஜ.க தலைவர் அமித்ஷா குஜராத் காந்திநகரிலும், ஸ்மிருதி இரானி உத்தர பிரதேசத்தின் அமேதியிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர்.

இதனால், குஜராத் எம்.எல்.ஏக்களால் ராஜ்யசபா எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அமித்ஷாவும், ஸ்மிருதி இரானியும் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். தற்போது குஜராத்தில் உள்ள 2 மாநிலங்களவை தொகுதிகளுக்கான தேர்தல் வருகிற ஜூலை 5ம் தேதி தனித்தனியாக நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தனித்தனியாக தேர்தல் நடத்தப்படுவதை எதிர்த்து குஜராத் எதிர்க்கட்சித் தலைவரான காங்கிரஸின் பரேஷ்பாய் தனானி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். அதில், பா.ஜ.க-வின் கட்டளைகளுக்கு இணங்க தேர்தல் ஆணையம் செயல்பட்டு வருகிறது என குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேலும், இரண்டு தொகுதிகளுக்கும் தனித்தனியாக தேர்தல் நடத்தினால் பா.ஜ.க-வினர் முறைகேடுகளில் ஈடுபடுவார்கள் என்றும், மாநிலங்களவையில் காங்கிரஸுக்கான இடம் மறுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரே நாளில் தனித்தனியாக தேர்தல் நடத்தப்பட்டால் அது ஆளுங்கட்சிக்கு ஆதரவாகவே முடியும் என்பதை கருத்தில் கொண்டே தேர்தல் ஆணையம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை செல்லாது என அறிவிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றத்தின் விடுமுறைகால அமர்வு காங்கிரஸின் மனு தொடர்பாக தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஜூன் 25-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.