India

வீரமரணமடைந்த வீரரின் தங்கைக்கு திருமணம் செய்து வைத்து மரியாதை செலுத்திய சக வீரர்கள்!

இந்திய விமானப்படை கமாண்டோ வீரர் ஜோதி பிரகாஷ் நிராலா கடந்த 2017ம் ஆண்டு பயங்கரவாதிகளுக்கு எதிரான தாக்குதலின் போது, சக வீரர்களை காக்கும் முயற்சியில் தன்னுயிரை நீத்தார்.

இவரது உயிர்த் தியாகத்தை போற்றும் வகையில், 2018ம் ஆண்டு குடியரசு தின விழாவின்போது பிரகாஷ் நிராலாவுக்கு நாட்டின் உயரிய விருதான அசோக சக்ர விருது அளிக்கப்பட்டது. இதனை பிரகாஷ் நிராலாவின் தாயும், மனைவியும் பெற்றுக்கொண்டனர்.

இந்நிலையில், சாதாரண விவசாய குடும்பத்தைச் சேர்ந்த பிரகாஷ் நிராலாவின் சகோதரி ஷஷிகலாவின் திருமணம் சமீபத்தில் பீகாரில் நடைபெற்றது.

திருமணத்துக்கு முன்பு, மறைந்த கமாண்டோ வீரரின் குடும்பம் கடுமையான வறுமையில் தவித்து வந்தது. இதனை அறிந்த ஜோதி பிரகாஷ் நிராலாவோடு பணிபுரிந்த சக வீரர்கள், அவரது தங்கையின் திருமணத்துக்கு ரூ. 5 லட்சம் அளித்தும், திருமணத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்துள்ளனர்.

திருமணத்தின் போது உயிரிழந்த வீரர் பிரகாஷ் நிராலாவுக்கு மரியாதையும் செலுத்தும் வகையில், வெவ்வேறு மாநிலங்களில் இருந்து வந்திருந்த ராணுவ வீரர்கள் தங்களது கைகளை பாதைகளாக மாற்றி மணமகள் ஷஷிகலாவை நடக்கச் செய்துள்ளனர்.

இந்த நெகிழ்ச்சியான நிகழ்வு சமூக வலைதளத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

இது தொடர்பாக பேசிய மணமகள் ஷஷிகலாவும், அவரது பெற்றோரும், கண்ணீர் மல்க ராணுவ வீரர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளனர். மேலும், வீரர்கள் தங்கள் மீது வைத்துள்ள அன்பு, ஒட்டுமொத்த தேசமும் தங்களுடன் இருப்பதாக எண்ணுகிறோம் எனவும் தெரிவித்தனர்.