India

முகிலன் எங்கே? - மத்திய அரசுக்கு ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கேள்வி!

மனித உரிமை ஆர்வலர் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலரான முகிலன் கடந்த பிப்ரவரி மாதம் காணாமல் போனார். முன்னதாக, ஸ்டெர்லைட் ஆலை குறித்தும், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்தும் அரசுக்கு எதிரான சில ஆதாரங்களை வெளியிட்டிருந்தார்.

இதன் பிறகு மதுரை செல்வதற்காக சென்னை எழும்பூர் ரயில் நிலையத்துக்கு வந்த முகிலன் இதுகாறும் காணவில்லை.

எனவே, முகிலனை கண்டுபிடிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவும் தொடரப்பட்டது. இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இதற்கிடையில், சமூக வலைதளங்களில் முகிலன் எங்கே, Where is mukilan என்ற ஹேஷ்டேக்குகள் ட்ரெண்ட் ஆனது.

இந்த நிலையில், சூழலியலாளர் முகிலனை கண்டுபிடிப்பது குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யுமாறு இந்திய அரசுக்கு ஐ.நா. மனித உரிமை கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.

மேலும், முகிலன் குறித்து ராஜபாளையத்தைச் சேர்ந்த போலீசார் ஒருவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டதா இல்லையா என்பது குறித்தும், இல்லையெனில் அதற்கான காரணம் என கேட்டு அறிக்கையாக தாக்கல் செய்ய கூறியுள்ளது.

அதேபோல், இந்தியாவில் உள்ள மனித உரிமை, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் பணியாற்றுவதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்தும் பதிவு செய்ய ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூறியிருக்கிறது.