India

தெலங்கானா உள்ளாட்சித் தேர்தலிலும் பா.ஜ.க காலி : அடுத்தடுத்த தோல்வியால் தொண்டர்கள் விரக்தி!

நாடு முழுவதும் நடந்து முடிந்த 17வது மக்களவைத் தேர்தலில் இந்திய முழுவதும் அதிக இடங்களை வென்று பா.ஜ.க ஆட்சியமைத்துள்ளது. தெலங்கானா மற்றும் கர்நாடகாவில் பா.ஜ.க வெற்றி பெற்றதன் மூலம் தென்னிந்தியாவில் பா.ஜ.க வலுவான அடித்தளம் அமைத்துள்ளது என்று தகவல்கள் வெளியானது.

இந்நிலையில், தெலங்கானா மாநில உள்ளாட்சித் தேர்தல் நடந்தது. உள்ளாட்சித் தேர்தலில் மொத்தம் உள்ள 32 மாவட்ட ஊராட்சிகளையும் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியே வெற்றி பெற்றுள்ளது. பா.ஜ.க படுதோல்வி அடைந்துள்ளது.

மாவட்ட ஊராட்சிகளில் மொத்தமுள்ள 538 இடங்களில் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி 445 இடங்களையும், காங்கிரஸ் 75 இடங்களிலும் வெற்றி பெற்ற நிலையில், பா.ஜ.க.,விற்கு வெறும் 8 இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளன. சுயேச்சைகள் 5 இடங்களைக் கைப்பற்றியுள்ளனர்.

ஊராட்சி ஒன்றிய வார்டுகளைத் தேர்தலில் மொத்தமுள்ள 5 ஆயிரத்து 816 இடங்களில் 3 ஆயிரத்து 557 இடங்களை தெலுங்கானா ராஷ்டிர சமிதியும், 1377 இடங்களை காங்கிரசும் கைப்பற்றியுள்ளன. பிற கட்சியினர் மற்றும் சுயேச்சைகள் 636 இடங்களை வென்றுள்ளனர். ஆனால் பா.ஜ.க வெறும் 211 இடங்களில் தான் வென்றுள்ளது.

இதேபோல சமீபத்தில் கர்நாடகாவிலும் பா.ஜ.க தோல்வியைத் தழுவியது. நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் கர்நாடகாவில் உள்ள 28 தொகுதிகளில் பா.ஜ.க 25 தொகுதிகளை கைப்பற்றியது. ஆனால், கடந்த மே 29-ஆம் தேதி நடைபெற்ற கர்நாடக உள்ளாட்சித் தேர்தலில், பா.ஜ.க தோல்வி அடைந்தது.

61 நகராட்சிகளில் இருக்கும் 1,221 வார்டுகளில் காங்கிரஸ் 509 வார்டுகளிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 174 வார்டுகளிலுமாக மொத்தம் 683 இடங்களில் வென்ற நிலையில், பா.ஜ.க.,வுக்கு 366 வார்டுகள் மட்டுமே கிடைத்தன என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்தல் முடிவுகள் வெளியாகி ஒரு மாதம் கூட ஆகாத நிலையில், பா.ஜ.க தொடர்ந்து இரண்டு இடங்களில் தோல்வியை தழுவியது என்பது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. இனி அடுத்தடுத்து பல மாநிலங்களில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறவிருக்கிறது அதன் தேர்தல் முடிவுகளும் பா.ஜ.க.,விற்கு எதிராகவே வரும் என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.