India

வெளியானது நீட் தேர்வு முடிவுகள் : டாப் 50-ல் இடம்பிடிக்காத தமிழக மாணவர்கள் !

ிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் உள்ள மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் நடைபெற்று வருகிறது. இந்த நீட் தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்துகிறது. நீட் தேர்வு கடந்த மாதம் 5ம் தேதி நடைபெற்றது. ஃபானி புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசாவில் நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டு 20ம் தேதி நடைபெற்றது.

இந்நிலையில், நீட் தேர்வு முடிவு இன்று மாலை 4 மணி அளவில் வெளியிடப்படும் என அறிவித்த நிலையில் 2 மணி நேரத்திற்கு முன்பே வெளியிடப்பட்டுள்ளது. தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களிலும் மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் 14 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் நீட் தேர்வை எழுதினர். இதில் தமிழ் நாட்டில் மட்டும் 14 நகரங்களில் 188 மையங்களில் நடைபெற்ற நீட் தேர்வை 1.40 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதியுள்ளனர். இந்த தேர்வு முடிவுகள் இணையதளததில் வெளியிடப்பட்டுள்ளது. ஆயுர்வேதா, சித்தா, ஆயுஷ் உள்ளிட்ட படிப்புகளுக்கும் நீட் மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடைபெறுகிறது. தேர்வு முடிவுகள் www.nta.ac.in , www.ntaneet.nic.in ஆகிய இணையதளங்களில் தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.

இதில் ராஜஸ்தானை சேர்ந்த நலின் கந்தேல்வால் என்ற மாணவன் 701 மதிப்பெண் எடுத்து இந்திய அளவில் முதலிடத்தை பிடித்துள்ளார். முதல் 50 இடங்களுக்குள் தமிழக மாணவ-மாணவிகள் இடம்பிடிக்கவில்லை. தமிழகத்தில் முதலிடம் பிடித்த மாணவி ஸ்ருதி, அகில இந்திய அளவில் 57-வது இடம் பிடித்துள்ளார். அவர் 720 மதிப்பெண்ணுக்கு 685 மதிப்பெண் எடுத்துள்ளார். மாற்றுத்திறனாளிகள் பிரிவில் தமிழகத்தின் கார்வண்ணப்பிரபு 575 மதிப்பெண் எடுத்து 5 -வது இடத்தை பிடித்துள்ளார்.

அதிகபட்சமாக டெல்லியில் 74.92% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தில் தேர்வெழுதிய 1,20 லட்சம் பேரில் 48,000 பேர் மட்டுமே தேர்ச்சியடைந்து உள்ளனர். தமிழகத்தில் மொத்தம் 48.57% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தை பொறுத்தவரை கடந்த ஆண்டை விட இந்தாண்டு தேர்ச்சி விகிதம் 9.01% அதிகரித்துள்ளது.