India

தமிழகத்துக்கு 9.19 டிஎம்சி தண்ணீர் வழங்க உத்தரவிட்ட காவிரி ஆணையம்-கைவிரித்த கர்நாடக அரசு!

காவிரியிலிருந்து தமிழகத்திற்கு உடனடியாக 9.19 டிஎம்சி தண்ணீர் திறக்குமாறு டெல்லியில் நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் கர்நாடக அரசுக்கு உத்தரவிடப்பட்டது. இதற்கு, கர்நாடக அரசு இப்போது தண்ணீர் வழங்க முடியாது எனக் கைவிரித்துள்ளது.

தமிழக மக்களின் மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையே காவிரி மேலாண்மை ஆணையத்தின் மூன்றாவது கூட்டம் டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் மசூத் உசேன் தலைமையில் இன்று நடைபெற்றது. ஆணைய கூட்டத்தில் தமிழக, கர்நாடக பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

மே மாதம் முடிவதற்குள் கர்நாடக அரசு காவிரியிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் வழங்க உத்தரவிட வேண்டும் என தமிழக அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. மேலும், குறுவை சாகுபடிக்கு ஏதுவாக ஜூன் மாதத்தில் 9.19 டிஎம்சி தண்ணீரை திறந்துவிட வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதுகுறித்து காவிரி மேலாண்மைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இதையடுத்து, காவிரியிலிருந்து தமிழகத்திற்கு உடனடியாக 9.19 டிஎம்சி தண்ணீர் திறக்குமாறு காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுக்கு மறுப்பு தெரிவித்துள்ளது கர்நாடக அரசு. கர்நாடக மாநில அணைகளில் தற்போது தண்ணீர் இல்லாததால் தமிழகத்திற்கு தண்ணீர் வழங்குவது குறித்து உடனடியாக உறுதியளிக்க கர்நாடகா மறுத்துள்ளது.

ஜூன் மாதத்தில் பருவமழை செய்து அணைகள் நிரம்பினால் மட்டுமே தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க முடியும் என்று காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் கர்நாடகா தெரிவித்துள்ளது.