India

சவால் விட்ட எம்.பி - வேலையை உதறி தேர்தலில் வென்ற இன்ஸ்பெக்டர்!

எம்.பி விடுத்த சவாலுக்காக, சர்க்கிள் இன்ஸ்பெக்டர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தலில் வெற்றிபெற்று எம்.பி ஆனவர் தனது மூத்த அதிகாரிக்கு சல்யூட் அடித்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம் இந்துப்பூரைச் சேர்ந்தவர் கொரண்ட்லா மாதவ். இவர் கதிரி போலீஸ் ஸ்டேஷனில் சர்க்கிள் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். கடந்த ஆண்டு ஆந்திராவின் ததிபாத்ரி பகுதியில் வன்முறை ஏற்பட்டபோது கலவரத்தை அடக்க முடியாததால் கொரண்ட்லா மாதவை விமர்சித்தார் தெலுங்கு தேசம்m கட்சியைச் சேர்ந்த அனந்தபூர் எம்.பி. திவாகர் ரெட்டி.

அந்த மோதலில், “உனது காக்கி சட்டையை கழற்றிவிட்டு அரசியலுக்கு வா பார்க்கலாம்” என மாதவிற்கு சவால் விட்டார் எம்.பி. திவாகர் ரெட்டி. இதையடுத்து போலீஸ் பணியை ராஜினாமா செய்த கொரண்ட்லா மாதவ், ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் சார்பில் இந்துப்பூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. அங்கு தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுவை அவரது ராஜினாமாவை காவல்துறை ஏற்றுக்கொள்ளாததைக் காரணம் காட்டி முதலில் தேர்தல் அதிகாரிகள் நிராகரித்தனர்.

பின்னர், இந்த விவகாரத்தில் மாநில நிர்வாக நீதிமன்றம் தலையிட்டு ராஜிமானாவை காவல்துறை உயரதிகாரியை ஏற்றுக்கொள்ளச் செய்து, அவரது வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட கொரண்ட்லா மாதவ் இந்துப்பூர் தொகுதியில் தெலுங்கு தேசம் கட்சியின் வேட்பாளர் கிருஷ்தப்பா நிம்மலாவை விட 1 லட்சத்து 40,748 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். எம்.பி., திவாகர் ரெட்டியின் சவாலை ஏற்றுக்கொண்டு வெற்றிகரமாக சாதித்துக் காட்டியுள்ளார்.

இந்நிலையில், கடந்த 23-ம் தேதி வாக்கு எண்ணும் மையத்திற்கு வந்த கொரண்ட்லா மாதவ், அங்கு தனக்கு மூத்த அதிகாரியாகப் பணியாற்றிய டி.எஸ்.பி மெகபூப் பாஷா வந்ததைப் பார்த்து அவருக்கு சல்யூட் அடித்தார். இருவரும் பரஸ்பரம் சல்யூட் அடித்துக்கொண்டனர். அந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.