India

மோடியை எதிர்த்த தேஜ் பகதூரின் வேட்பு மனு நிராகரிப்பு : தேர்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ்! 

பிரதமர் மோடியை எதிர்த்து வாரணாசி தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் செய்த இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை முன்னாள் வீரர் தேஜ் பகதுாரின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது குறித்து, உச்சநீதிமன்றம் தேர்தல் ஆணையத்திடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையில் பணியாற்றிய தேஜ் பகதுார், இரண்டு ஆண்டுகளுக்கு முன், இராணுவம் மற்றும் துணை ராணுவப் படையினருக்கு, தரமற்ற உணவு வழங்கப்படுவதாக குற்றம் சாட்டி ஒரு காணொளியை வெளியிட்டிருந்தார். இதனால் இராணுவ நடத்தை விதிமுறைகளின்பேரில், அவர் பணிநீக்கம் செய்யப்பட்டார்.

இந்நிலையில், மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில் அவரை எதிர்த்துப் போட்டியிடுவதற்காக தேஜ் பகதுார், அகிலேஷின் சமாஜ்வாதி கட்சி சார்பில் வேட்பு மனு தாக்கல் செய்தார். அவருக்கு ஆதரவு மிகுந்துவந்த நிலையில் அவரது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது.

தேஜ் பகதூர் தாக்கல் செய்த வேட்பு மனுவில் போதிய தகவல்கள் இல்லை எனக் கூறி, அவரது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார் தேஜ் பகதுார்.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு முன் இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. விசாரித்த நீதிபதிகள் அமர்வு, தேஜ் பகதுாரின் கோரிக்கை குறித்து பரிசீலித்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து இன்று தேர்தல் ஆணையம் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.