India

நிலக்கரி மோசடி வழக்கை நிரூபிக்காவிடில் 100 தோப்புக்கரணம் போடுங்கள் - மோடிக்கு மம்தா பதிலடி

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர், நிலக்கரியை கடத்தியும், நிலக்கரி சுரங்க ஊழியர்களின் ஊதியத்தில் ஊழல் செய்வதாகவும் மேற்கு வங்கத்தின் பங்குராவில் நடைபெற்ற பேரணியின் போது பிரதமர் மோடி குற்றஞ்சாட்டியிருந்தார்.

இதனையடுத்து, அதேப்பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்ட முதலமைச்சர் மம்தா பானர்ஜி, “நிலக்கரி சுரங்கங்களை மத்திய அரசுக்கு கீழ் உள்ள நிலக்கரி அமைச்சகமே கண்காணிக்கிறது. அதற்கு மத்திய தொழில் பாதுகாப்பு படையே பாதுகாப்பு அளித்து வருகிறது. ஆகவே, நிலக்கரி ஊழலில் பாஜகவினரே ஈடுபடுகின்றனர்” என மோடிக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், “திரிணாமுல் காங்கிரஸார் மீது சுமத்தப்பட்ட நிலக்கரி மோசடி புகாரை பிரதமர் மோடி நிரூபித்துவிட்டால், 42 தொகுதியிலும் போட்டியிட உள்ள எங்கள் கட்சி வேட்பாளர்களை வாபஸ் பெற்றுக்கொள்கிறேன்” என்றார்.

அவ்வாறு நிரூபிக்காவிடில், “மக்கள் முன்னிலையில் பிரதமர் மோடி 100 தோப்புக்கரணம் போடுங்கள்” என மம்தா சவால் விடுத்துள்ளார்.

மேலும், நிலக்கரி, கால்நடைத் துறைகளில் நடைபெறும் ஊழல்கள் குறித்த ரகசிய தகவல்கள் என்னிடம் உள்ளது, அதில் தொடர்புடைய பாஜகவை சேர்ந்த மத்திய அமைச்சர் மற்றும் எம்.பி குறித்த விவரங்களும் என்னிடம் உள்ளது என்றார். சாராதா சிட்ஃபண்டு குறித்த திரிணாமுல் காங்கிரஸார் மீதான குற்றச்சாட்டுகள் இன்னும் நிரூபனமாகவில்லை என்றும் கூறினார்.