India

பாலியல் வன்முறைக்கு உடைதான் காரணமா? - பொட்டில் அடித்தாற்போல விளக்கும் கண்காட்சி!

பெண்களுக்கு எதிராக ஒவ்வொரு முறை குற்றங்கள் நடைபெறும்போதும், பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் நிற்பதற்குப் பதிலாக, அவர்களது நடத்தை குறித்தும் அணிந்திருந்த உடைகளைக் குறித்தும் ஒரு பிரிவு கேள்வி எழுப்புவது வழக்கம்.

பாலியல் வன்முறைக்கு உள்ளான பெண்ணின் உடை குறித்துக் கேள்வி எழுப்புவதன் மூலம், அவருக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கான எதிர்ப்பை நீர்த்துப் போகச் செய்ய முயல்கிறார்கள் இவர்கள். இதற்குப் பின்னால் பச்சையான ஆணாதிக்க மனோபாவம் இருப்பதை நம்மால் உணரமுடியும்.

கவர்ச்சியான உடைதான் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளுக்குக் காரணமென்றால் வயதானவர்கள் மீதும், குழந்தைகள் மீதும் நடத்தப்படும் பாலியல் ரீதியான வன்முறை வெறியாட்டங்களுக்கும் அதுதான் காரணமா? பெண்கள் இன்னதுதான் அணியவேண்டுமெனத் தீர்மானிக்க ஆண்கள் யார்?

பாலியல் வன்முறை குறித்தும், பாதிக்கப்பட்டோர் மீது குற்றம்சுமத்துவது குறித்தும் புரிதலை ஏற்படுத்த சில தன்னார்வ அமைப்புகள் முயன்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, மிச்சிகன் பல்கலைக்கழக அருங்காட்சியம் சமீபத்தில் ஒரு கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளது.

அந்தக் கண்காட்சியில் பாலியல் வன்முறையின்போது பாதிக்கப்பட்டோர் அணிந்திருந்த ஆடைகள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. இதில், பைஜாமாக்களும், டிராக் ஷூட்களும், குழந்தைகள் அணியும் சட்டைகளும் கூட அடக்கம். பாதிக்கப்பட்டோர் அணிந்திருந்த ஆடைகளை பாதிக்கப்பட்டோருக்கான ஆதரவு அமைப்புகளிலிருந்து பெற்று காட்சிப்படுத்தியுள்ளனர்.

ஒருவர் அணிந்திருக்கும் உடை அவர் மீது நிகழ்த்தப்படும் பாலியல் வன்முறைக்கு ஒருபோதும் பொறுப்பேற்க முடியாது என்பதை ஒவ்வொருவரையும் உணரச் செய்வதே இந்தக் கண்காட்சியின் நோக்கம்.