India

மோசடி, வரி ஏய்ப்புகளைக் குறைக்க ஜிஎஸ்டி ‘இ-இன்வாய்ஸ்’ : விரைவில் அறிமுகம்!


கடந்த ஆண்டில் ஏப்ரல் 2018-ல் இருந்து  2019-ம் ஆண்டு பிப்ரவரி வரை, சுமார் 20,000 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு நடந்துள்ளதாகவும், அதில் இதுவரையில் 10,000 கோடி ரூபாய் திரும்ப வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் ஜி.எஸ்.டி ஆணையம் தெரிவித்துள்ளது.

இதனை அடுத்து, தற்போது ஜிஎஸ்டி வரிக்கான குறிப்பிட்ட விற்றுமுதலுக்கு (Turnover) மேற்பட்ட விற்பனைகளுக்கு, ஜிஎஸ்டி இணையதளத்திலேயே இ-இன்வாய்ஸ் (e-Invoice) என்ற மின்னணு விலைப்பட்டியலைத் தயாரிக்கும் பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாக ஜி.எஸ்.டி ஆணையத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், ”குறிப்பிட்ட விற்றுமுதலுக்கும் , கூடுதலான விற்பனை பரிமாற்றங்களில் ஈடுபட்டுள்ளவர்கள் அனைவரும், ஒவ்வொரு விற்பனை பரிமாற்றத்திற்கும் (Sales Transaction or Sales Invoice) அரசு இணையதளத்திலேயே இ-இன்வாய்ஸை உருவாக்கிக்கொள்ள முடியும். மேலும், வர்த்தகர்கள் உருவாக்கும் ஒவ்வொரு இன்வாய்ஸுக்கும் பிரத்தியேக எண் அளிக்கப்படும்.

விற்பனைக்கான வருமான வரி கணக்கு மற்றும் வரி செலுத்திய விவரங்களுடன் ஒப்பிடும் வகையில் இந்த எண் இருக்கும். ஒட்டுமொத்த விற்பனைக்கும் இந்த மின்னணு இன்வாய்ஸ் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். சில வர்த்தகர்களுக்கு அவர்களது விற்பனை அளவை கருத்தில் கொண்டு மென்பொருள் வழங்கப்படும். இந்த விற்பனை அளவு அவர்கள் சமர்ப்பிக்கும் இன்வாய்ஸுக்கு ஏற்ப நிர்ணயிக்கப்படும். அதாவது தனித்தனி விற்பனை பில்களாக அல்லாமல், ஆண்டு விற்பனை அளவுக்கு ஏற்ப உச்சவரம்பு முடிவு செய்யப்படும்.

இவ்வாறு, இ-பில் உருவாக்கப்படும் போது அதனுடன் சரக்கு பரிமாற்றத்திற்கான இ-வே பில்லும், ewaybill.nic.in என்ற இணையதளத்தில் தானாக உருவாகிவிடும். இதன்மூலம், போலியான விலைப்பட்டியல் மூலம் நடத்தப்படும் மோசடிகளும், வரி ஏய்ப்புகளும் குறையும்” என்று அதிகாரி தெரிவித்தார்.