India

முள்ளை முள்ளால் எடுக்குறாங்க... மோடிக்கு எதிராக போட்டியிடும் முன்னாள் ராணுவ வீரர்...

நாடாளுமன்றத் தேர்தலின் 7ம் கட்ட வாக்குப்பதிவாக, உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் மே 19ம் தேதி நடைபெறுகிறது.

வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து, முன்னாள் எல்லை பாதுகாப்புப்படை வீரர் தேஜ் பகதூர் யாதவ் போட்டியிடுகிறார். சமாஜ்வாதி கட்சி தனது வேட்பாளர் ஷாலினி யாதவை விலக்கிக்கொண்டு தேஜ் பகதூருக்கு ஆதரவளித்திருக்கிறது.

விரைவில் காங்கிரஸ் வேட்பாளரான அஜய் ராயும் தனது வேட்பு மனுவை திரும்பப்பெற்றுக்கொண்டு, மோடிக்கு கடுமையான போட்டி ஏற்பட வழிவகுப்பார் என்று கூறப்படுகிறது.

இதற்குக் காரணம், பாதுகாப்புப் படை வீரரான தேஜ் பகதூர் யாதவ் கடந்த 2017ம் ஆண்டு பணியில் இருந்தபோது, “நாட்டை காக்கும் வீரர்களுக்கு போதிய உணவு வழங்காமல் ஊழல் செய்கிறார்கள்” என்று நேரடியாகவே மோடி அரசை குற்றஞ்சாட்டி சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்றை பதிவிட்டார். இது நாடு முழுவதும் வைரலானது. அதனை அடுத்து, தேஜ் பகதூர் ராணுவப் பணியில் இருந்து மோடி அரசால் நீக்கப்பட்டார்.

தேஜ் பகதூர் யாதவ்

ஆனால் தற்போது, “நாட்டை என்னால்தான் பாதுகாக்க முடியும்” என்று மேடைக்கு மேடை முழங்கிவரும் பிரதமரை எதிர்த்து பாதுகாப்புப்படை வீரர் ஒருவரே களமிறங்கி இருப்பது பாஜகவுக்கு வட இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.