India
செக் வைத்து ‘டிக்டாக்’ தடையை நீக்கியது உயர் நீதிமன்ற கிளை!
சமூக வலைதளங்களில் சமீபத்தில் மிகப் பிரபலமானது ‘டிக்டாக்’ செயலி. சிறுவர்கள், இளைஞர்கள் முதல் முதியோர் வரை அனைவரும் இந்த டிக்டாக்கில் நகைச்சுவையாகவும் பாடல்களாகவும் வீடியோக்களை பதிவேற்றம் செய்து வருகின்றனர். இதில் சிலர் தங்களது நடிப்புத் திறமைகளையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.
ஆனாலும் ஒரு சிலர் இந்த டிக்டாக் செயலியை துஷ்பிரயோகம் செய்து, அதில் ஆபாசமாக வீடியோக்களை பதிவிடுவதால் அது மற்ற சமூக வலைதளங்களிலும் பரவி வருகிறது. இதனால் கலாசார மற்றும் சமூக சீர்கேடு ஏற்படும் எனக் கூறி பொதுநல வழக்கு சென்னை உயர் நீதிமன்றக் கிளையில் தொடரப்பட்டது.
இதனை விசாரித்த உயர்நீதிமன்றம் டிக் டாக் செயலியை பதிவிறக்கம் செய்வதற்கு தடை விதிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. இதனையடுத்து டிக் டாக் செயலியை கூகுள் ப்ளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஐ ஸ்டோரில் இருந்து நீக்க அந்த நிறுவனங்களுக்கு வலியுறுத்தியது. அதன்படி ஆப் ஸ்டோர்களில் இருந்து டிக்டாக் செயலி நீக்கப்பட்டது.
உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் டிக்டாக் நிறுவனம் மேல் முறையீடு செய்தது. டிக்டாக் தடையினால் எங்களுக்கு நாள் ஒன்றுக்கு 4 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டதாக மனுவில் குறிப்பிட்டிருந்தது.
இதனை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஏப்.,24 அன்று டிக்டாக் தடை குறித்து உயர் நீதிமன்றம் முடிவெடுக்க வேண்டும் எனவும், அவ்வாறு ஏதும் முடிவெடுக்காவிட்டால் டிக்டாக் மீதான தடை நீக்கப்பட்டதாக கருதப்படும் என தெரிவித்தனர்.
இந்நிலையில், டிக்டாக் மீதான தடையை நிபந்தனைகளுடன் நீக்கி உயர்நீதிமன்ற மதுரை கிளை தற்போது உத்தரவிட்டுள்ளது. சிறார்கள் மற்றும் பெண்கள் குறித்து ஆபாசமாகவோ அல்லது சமுதாய சீர்கேடு ஏற்படுத்தும் விதத்திலோ வீடியோக்கள் பதிவிட்டால் 15 நிமிடங்களில் நீக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனையோடு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நிபந்தனைகளை மீறினால் அவதூறு வழக்குத் தொடரப்படும் எனவும் எச்சரித்துள்ளது.
Also Read
-
ஒன்றிய பா.ஜ.க அரசின் புதிய ஆயுதமாக மாறியுள்ளது சென்சார் போர்டு : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
அரசு சேவைகள் இனி மக்களின் விரல் நுனியில் : “நம்ம அரசு” whatsapp Chatbot சேவை தொடக்கம்!
-
தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப தமிழ்நாட்டை கட்டமைக்கும் திராவிட மாடல்: UmagineTN- துணை முதலமைச்சர் உதயநிதி
-
ரூ.13.81 கோடியை விடுவிக்க வேண்டும் : ஒன்றிய அரசின் வாரிய கூட்டத்தில் அமைச்சர் மதிவேந்தன் வலியுறுத்தல்!
-
நம்பி வாங்க.. சந்தோஷமா போங்க.. ரூ.4.5 கோடி மோசடி.. பதுங்கியிருந்த பாஜக நிர்வாகியை தட்டி தூக்கிய போலீஸ்!