India

நீங்கள் ஓட்டு போட்ட அளவுக்கு தான் குடிநீர் கிடைக்கும் - குஜராத் மந்திரி சர்ச்சை பேச்சு 

குஜராத் மாநிலத்தில் கோடை வெயிலின் தாக்கத்தால் பல இடங்களில் ஏரிகளில் உள்ள நீர்மட்டம் குறைந்து சில மாவட்டங்களில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், பாராளுமன்ற தேர்தலுக்காக அம்மாநிலத்தின் ஆளும்கட்சியான பாஜக தீவிரமாக பிரசாரம் செய்து வருகிறது. குடிநீர் பிரச்சனையை மையமாக வைத்து ராஜ்கோட் மாவட்டத்தில் கனேசாரா கிராமத்தில் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவ்வழியாக குஜராத் மாநில குடிநீர் வினியோகம் மற்றும் கால்நடைத்துறை மந்திரி கன்வர்ஜி பவாலியா வாக்கு சேகரிக்க வந்தார். அவரை வழிமறித்த பெண்கள் தங்கள் பிரச்சனையை கூறி முறையிட்டனர்.

அவர்களிடம் கடுகடுப்பாக பேசிய மந்திரி கன்வர்ஜி பவாலியா, கடந்த தேர்தலில் நான் உங்களிடம் எவ்வளவோ கெஞ்சிக் கேட்டு பிரசாரம் செய்தும் நீங்கள் எனக்கு 55 சதவீதம் வாக்குகளை தானே அளித்தீர்கள்? என்று கிண்டலாக கேட்டார்.

அவருடன் வந்திருந்த அந்த தொகுதியின் பாஜக முன்னாள் எம்.எல்.ஏ. பரத் கோக்ரா நீங்கள் ஓட்டு போட்டது போல் பாதி அளவு தண்ணீர் மட்டுமே கிடைக்கும் என கேலியாக குறிப்பிட்ட சம்பவம் குஜராத் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.