DMK Government

“தி.மு.க கூட்டணி மாபெரும் வெற்றி - தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராகிறார்”: வெற்றி வேட்பாளர்களின் விபரங்கள்!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. இதைத்தொடர்ந்து தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு தி.மு.க ஆட்சி அமைகிறது.

தமிழகத்தில், தற்போதைய சட்டப்பேரவையின் பதவி காலம் முடிவடைவதையொட்டி மொத்தமுள்ள 234 தொகுதிக்கான சட்டப்பேரவை தேர்தல் மற்றும் கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் மாதம் 6ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்று வாக்குகள் எண்ணிக்கை மே 2 ஞாயிறன்று நடைபெற்றது.

பல்வேறு தொகுதிகளில் வாக்குப்பெட்டிகள் வரிசை மாற்றம், கண்ட்ரோல் யூனிட்டுகள் திடீர் கோளாறு உள்ளிட்ட சிற்சிலபிரச்சனைகள் நிலவின. எனினும் வாக்கு எண்ணிக்கை பலத்த பாதுகாப்புடனும் பரபரப்புடனும் நடந்தது. நிமிடத்திற்கு நிமிடம் நிலவரங்கள் மாறிக் கொண்டே இருந்தன. துவக்கம் முதலே தி.மு.க தலைமையிலான அணி முன்னிலை பெற்றது. தொடர்ந்து தி.மு.க அணி வெற்றி முகத்திலேயே இருந்தது.

இந்த தேர்தலில் தி.மு.க தலைமையிலான கூட்டணியில் தி.மு.க போட்டியிட்ட 174 வேட்பாளர்களில் 127 பேர் வெற்றி பெற்றுள்ளனர். தமிழகத்தில் ஆட்சி அமைக்க 117 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தேவை. ஆனால், தற்போது தி.மு.கவினர் மட்டுமே 130 பேர் வெற்றி பெற்றுள்ளதால் தி.மு.க தனி மெஜாரிட்டி பெற்றுள்ளது. இதன்மூலம் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் முதல்வராக பதவியேற்க உள்ளார்.

தி.மு.க கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் 16, ம.தி.மு.க 4, வி.சி.க, 4, சி.பி.எம் 2, சி.பி.ஐ, 2, கொ.ம.தே.க. 1 என்ற சீட் அடிப்படையில் வெற்றி பெற்றுள்ளது. தமிழகத்தில் முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ள தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு நாடு முழுவதும் இருந்து வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. அரசியல் தலைவர்கள், பல்வேறு மாநில முதலமைச்சர்கள் உள்ளிட்ட பலரும், இதயப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக அவரைத் தொடர்பு கொண்டு பேசி வருகின்றனர்.

Also Read: #ElectionResults #LIVE தி.மு.க கூட்டணி 160 தொகுதிகளில் முன்னிலை... அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி!